தமிழகம்

சென்னையில் 3-வது நாளாக மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் கைது

உதவித் தொகை உயர்வு கோரி தமிழகம் முழுவதும் தொடரும் போராட்டம்

மு.வேல்சங்கர்

சென்னை: மாதாந்திர உதவித் தொகையை குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கக் கோரி, சென்னை காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

ஆந்திராவில் வழங்குவதை போல, தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கக் கோரி தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மாநில ஆணையரகம் முன்பாக கடந்த 2 நாட்களாக போராட்டம், மறியல் நடைபெற்றது.

          

இருப்பினும், இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. மேலும், எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.

இதன் காரணமாக, போராட்டத்தை தொடர முடிவு செய்தனர். அதன்படி, உதவித் தொகையை உயர்த்தி வழங்கக் கோரி, சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மாநிலஆணையரகம் முன்பாக இன்று 3-வது நாளாக மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி உள்பட 200-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்து, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்துக்கு அழைத்து சென்றனர்.

இதுபோல, உதவித் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, தமிழகத்தில் 36 மாவட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள் கைது செய்யப்பட்டதாக தமிழக அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டம் குறித்து, சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன் கூறுகையில், "எங்களின் ஒற்றை கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றும் வரை எங்கள் போராட்டம் தொடரும். நாளை (பிப்.13) திருவொற்றியூர், சேத்துப்பட்டு, தாம்பரம் ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலங்களில் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும்" என்றார்.

SCROLL FOR NEXT