சென்னை: மாற்றுத்திறனாளிகள் அமைப்பினருடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பு வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.
தமிழக முதல்வரை, பல்வேறு காரணங்களுக்காக பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், முக்கியமான தனிநபர்கள் சந்திப்பது வழக்கம். அவ்வாறு சந்திக்கும் போது, தமிழக அரசின் செய்தித்துறை சார்பில் புகைப்படம், செய்தி வெளியிடப்படும்.
இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய்யை, நேற்று காலை மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் நிர்வாகிகள் சந்தித்தனர். இந்த சந்திப்பு தொடர்பான படங்கள் அரசு செய்தித் துறையால் வெளியிடப்பட்டது.
இதற்கிடையே, நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு தெடார்பான வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த வீடியோ அதிகளவில் பகிரப்பட்ட நிலையில், சர்ச்சையானது.
குறிப்பாக, அதில் ஒரு அமைப்பைச் சேர்ந்த பெண் நிர்வாகி, முதல்வரிடம் மாற்றுத்திறனாளி துறைக்கு அதிகாரியாக நியமிக்கப்படுபவர், வேறு துறைகளுக்கும் பொறுப்பாக இருப்பதால் ஏற்படும் பிரச்சினை குறித்து தனது கருத்தை தெரிவிக்கிறார்.
அவர்கள் அளித்த மனுக்களை முதல்வர் பார்வையிடுகிறார். இந்த வீடியோ வெளியான நிலையில் யார் எடுத்து வெளியிட்டது என்ற கேள்வி எழுந்தது. ஆய்வில், மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பா.சிம்மச்சந்திரன் எடுத்து அனுப்பியது என்பது உறுதியானது.
இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, “எங்கள் துறைக்கு பொறுப்பேற்றுள்ள முதல்வருக்கு நன்றி கூற சென்றிருந்தோம் அப்போது, உதவித் தொகை ரூ.6 ஆயிரம் உயர்த்தவும், வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகக்கூடிய வகையில் வசதிகள் செய்து தரவும் கோரிக்கை வைத்தோம்.
அவர் எங்கள் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டார். முதல்வருடன் ஃபோட்டோ எடுக்க வேண்டும் என ஆர்வத்தில் அதை செய்தேன். செல்ஃபி மாதிரி வீடியோ எடுத்து, எனது குரூப்பில் ஆர்வக்கோளாரில் பகிர்ந்தேன். தவறு எங்கள் மீது தான்.
இதை சமூக ஊடங்களில் தவறுதலாக பரப்பி விட்டார்கள். அவர் எங்களிடம் 45 நிமிடங்கள் மனம் விட்டு பேசினார். இதை சிலர் தவறாக சமூக ஊடகங்களில் பரப்பியதால், நாங்கள் அவரை சந்தித்து பேசியது எல்லாம் வீண் ஆகிவிட்டது" என்றார்.