திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி குறித்து பாஜக கவுன்சிலர் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம் மேயர் இளமதி தலைமையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. துணை மேயர் ராஜப்பா, மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி அனைத்துப் பிரிவு அலுவலர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதத்தின்போது, தனபாலன்(பாஜக) பேசுகையில், “எனது 14-வது வார்டில் சாலையில் மழைநீர் தேங்குகிறது. பாதாள சாக்கடை பணிகள் முழுமை அடையாததால் கழிவுநீரும் தேங்குகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன். அமைச்சர் அர.சக்கரபாணியின் மைத்துனர் வீடு அப்பகுதியில் உள்ளது. அமைச்சர் சக்கரபாணி மீது உங்களுக்கு ஏதும் கோபம் உள்ளதா?” என்றார்.
அப்போது, ஆனந்தன்(திமுக), “இந்த பிரச்சினையில் தொடர்பில்லாமல் அமைச்சர் பெயரை பயன்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்” என்றார்.
அதன்பின், பாஜக கவுன்சிலர் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் ஆனந்தன், ஜான்பீட்டர் ஆகியோர் குரல் எழுப்பினர். இதையடுத்து திமுக கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து பாஜக கவுன்சிலர் தனபாலனை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து பாஜக கவுன்சிலரை சஸ்பெண்ட் செய்யவேண்டும் என மேயருக்கு திமுக கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மேயர் இளமதி பாஜக கவுன்சிலர் தனபாலனை 3 மாதம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
அதன்பின் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தபடி கவுன்சிலர் தனபாலன் கூட்டத்தை விட்டு வெளியேறினார். மக்கள் பிரச்சனையை பேச வாய்ப்பளிக்காமல் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதைத் தொடர்ந்து கூட்டத்தில் நடந்த விவாதம்:
ஜோதிபாசு (மார்க்சிஸ்ட்): நகர் விற்பனைக் குழு தேர்தல் முறையாக அறிவிப்பு செய்து நடைபெறவில்லை. தற்போது வரை சாலையோர வியாபாரிகளின் அடையாள அட்டையை முழுமையாக விநியோகம் செய்யவில்லை.
நகர விற்பனைக் குழு தலைவரான மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் தன்னிச்சையாக செயல்படுகிறார்.
நகர விற்பனைக்குழு தேர்தலை ரத்து செய்து மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் எனக் கூறி வெளி நடப்பு செய்தார். இதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் கணேசன், மாரியம்மாள் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.
பாஸ்கரன்(அதிமுக): எனது வார்டில் கடந்த 4 ஆண்டுகளில் எந்தவித பணியும் நடைபெறவில்லை.
மேயர்: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செய்யாத பணிகளை கடந்த 4 ஆண்டுகளில் செய்துள்ளோம்.
ராஜ்மோகன் (அதிமுக): 4 ஆண்டுகளில் எதையும் செய்யாமல் கடந்த பத்து ஆண்டுகள் குறித்து குறைகூறிக் கொண்டிருப்பது ஏன்.?
பாஸ்கரன் (அதிமுக): மாநகராட்சியை கண்டித்து வெளிநடப்பு செய்கிறோம்.
அதிமுகவினர் வெளிநடப்பு செய்யும்முன் மேயர், துணை மேயர் ஆகியோர் கூட்டம் முடிந்து விட்டதாக கூறி வெளியேறினர்.