மக்களை எளிதில் சென்றடையும் வகையில் டிஜிட்டல் ஆட்டோ பிரச்சாரம்.| ஆட்டோ டிரைவர் ஜமீர் பாட்ஷா
திருச்சி: நாதகவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆட்டோவில் எல்இடி டிவியை பொருத்தி டிஜிட்டல் முறையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திருச்சி மாவட்டத்தில் திமுக, அதிமுக போன்ற பிரதான கட்சிகளின் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரங்கள் கட்சி தொண்டர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுடன் தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் களைகட்டுகிறது.
அதேவேளையில் நாதக, தவெக வேட்பாளர்களும் தங்களால் முடிந்தளவு தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர். ஒவ்வொரு வேட்பாளரும் 10 பேருடன்வீடு, வீடாக சென்று வாக்குகளை சேகரிக்கின்றனர்.
இதில், திருச்சி மேற்கு தொகுதி நாதக வேட்பாளர் புவனேஸ்வரிக்கு ஆதரவு திரட்டும் வகையில், தென்னூர் குத்பிசா நகரைச் சேர்ந்த நாதக பகுதி பொறுப்பாளர் ஜமீர்பாட்ஷா ‘எதையும் எதிர்பார்க்காமல்’ தனது ஆட்டோவில் சொந்த செலவில் எல்இடி டிவியை பொருத்தி டிஜிட்டல் பிரச்சாரம் செய்தவாறு தொகுதி முழுவதும் வலம் வருகிறார்.
இது குறித்து ஜமீர் பாட்ஷா ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: நான் நாதக ஆரம்பித்த காலத்தில் இருந்து கட்சியில் இருக்கிறேன். எனது கட்சிக்கு என்னால் முடிந்தளவு பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதற்காக எனது ஆட்டோவில் எல்இடி டிவியை பொருத்தி, டிஜிட்டல் பிரச்சாரம் செய்து வருகிறேன். இதற்காக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சவாரி கூட செல்லாமல் தொகுதியை வலம் வந்து கொண்டுள்ளேன்.
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு, நாதகவின் தேர்தல் மற்றும் கொள்ளை விளக்க பாடல்களை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆட்டோவை நிறுத்தி ஒளிபரப்புகிறேன். இதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதியும் பெற்றுள்ளேன்.
இந்தப் பிரச்சாரத்தை பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர். ஆனால், செல்லுமிடமெல்லாம் தவெகவினர் தான் என்னிடம் வீணாக பிரச்சினை செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.