கோப்புப் படம்

 
தமிழகம்

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி தீக்குளிப்பு

நில பிரச்சினை விவகாரத்தில் விபரீத முடிவு

செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி: நிலப் பிரச்சினையால் ஏற்பட்ட மனஉளைச்சலில் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் தீக்குளித்தார். 60 சதவீத காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் ஏனுசோனை ஊராட்சி மாதரசனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சிக்கண்ணா என்பவரின் மகன் வெங்கடேஷ் (50). மாற்றுத் திறனாளியான இவர் விவசாயம் செய்து வருகிறார்.

இந்நிலையில், இவர் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்தார். அலுவலக வளாகத்தின் ஒரு பகுதிக்கு வந்தவர், தான் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், வெங்கடேஷ் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து, அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு 60% காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் இதுதொடர்பாக வெங்கடேஷ் கூறும்போது, “எனது நிலத்தின் அருகே உள்ளவருக்கும் எனக்கும் நிலம் தொடர்பாக பிரச்சினை உள்ளது. இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் தீக்குளித்தேன்” என்றார். இதுதொடர்பாக வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் போலீஸார் கூறும்போது, “வெங்கடேஷின் தந்தை தனது சொத்துகளை மகன்களுக்கு பிரித்துக் கொடுத்துள்ளார்.

இதில், வெங்கடேஷ் தனது நிலத்தை அளவீடு செய்ய 2025 செப்டம்பரில் மனு அளித்தார். அதன் மீது டிசம்பரில் தீர்வு காணப்பட்டது. இந்நிலையில், அவர் தீக்குளித்துள்ளார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர்.

SCROLL FOR NEXT