தமிழகம்

பிரிந்தவர்களுக்கான ‘பி பிளான்’ - பழனிசாமியிடம் பேச வாசனை அனுப்பியதா பாஜக?

வி.சீனிவாசன்

பிரிந்து கிடக்கும் அதிமுக அணிகளை ஒருங்கிணைப்பதற்காக ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் சமயத்தில் இருந்து விடாமல் தொடர் முயற்சிகளை எடுத்து வரும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இப்போதும் அதற்கான முயற்சிகளை புதிய ஃபார்முலாவுடன் தொடங்கி இருப்பதாக செய்திகள் வருகின்றன.

அதிமுக அணிகள் ஒன்றாக இணையவேண்டும், பாஜக-வுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைய வேண்டும் என்பதில் அதிக முனைப்போடு செயல்பட்டவர்; இன்னமும் செயல்பட்டு வருபவர் வாசன். அதனால் தான் அதிமுக அணிகளை எந்த விதத்திலாவது ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து நிறுத்தும் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்திருக்கிறது பாஜக.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாநில பாஜக நிர்வாகி ஒருவர், “பழனிசாமி விரும்பாவிட்டாலும் அதிமுக ஒன்றுபட்டு நின்றால் தான் தங்கள் அணிக்கு பலம் என நம்புகிறது பாஜக தலைமை. அதை நேரடியாகவும் மறைமுகமாகவும் அதிமுக-வில் இருக்கும் தங்களது விசுவாசிகள் மூலமாகவும் அவ்வப்போது பழனிசாமிக்கு உணர்த்திக் கொண்டும் வருகிறது.

பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியை தொடங்க செங்கோட்டையன் கெடு வைத்ததும் அப்படியான ஒரு முயற்சிதான். ஆனால், தனது பேச்சு பழனிசாமியிடம் எடுபடாமல் போனதால், தானே களத்தில் இறங்கிய செங்கோட்டையன், தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோருடன் வெளிப்படையாகவே கைகோத்தார். இதனால் அவரை கட்சியை விட்டு அதிரடியாக நீக்கினார் பழனிசாமி. ஆனாலும் பாஜக தலைமையின் ஆதரவு தனக்கு இருப்பதால் ‘அதிசயம்’ நடக்கும் என்ற அசாத்திய நம்பிக்கையில் இருக்கிறார் செங்கோட்டையன்.

இதற்கு நடுவில் தான், அடுத்ததாக ஒருங்கிணைப்பு முயற்சியில் வாசனை அணிலாக பயன்படுத்தி இருக்கிறது பாஜக தலைமை. சேலத்தில் பழனிசாமியை தான் சந்தித்தது வழக்கமான ஒன்று தான் என்று வாசன் சொன்னாலும், அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டவர் களை மீண்டும் கட்சிக்குள் சேர்க்காவிட்டாலும் தனி அணியாகவாவது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் அங்கீகரிக்க வேண்டும் என்ற பாஜக தலைமையின் விருப்பத்தை பழனிசாமி உடனான சந்திப்பின் போது வாசன் தெரிவித்ததாகச் சொல்கிறார்கள்.

கோவை விசிட்டின் போது வாசனை சாட்சியாக வைத்துக் கொண்டு பிரதமர் மோடியும் இது விஷயமாக பழனிசாமியிடம் பேசுவதாக திட்டம் இருந்தது. ஆனால், கோவை நிகழ்ச்சிக்கு பிரதமர் ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததால் இந்தப் பேச்சுவார்த்தை நடக்காமல் போய்விட்டது.

என்றாலும், செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி. தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பதற்குப் பதிலாக, அவர்களை தனி அணியாக அங்கீகரித்து பாஜக-வுக்கு ஒதுக்கப்படும் சீட்களில் அவர்களுக்கும் சில தொகுதிகளை விட்டுக் கொடுப்பது தொடர்பாக பழனிசாமி தரப்பிடம் தொடர்ந்து வாசன் பேசிக் கொண்டிருக்கிறார். அநேகமாக பிரதமர் அல்லது அமித் ஷாவுடனான பழனிசாமியின் அடுத்த கட்ட சந்திப்பின் போது இந்தப் பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை எட்டலாம்” என்றார்.

எல்லாம் சரி, “பழனிசாமியை முதல்வர்வேட்பாளராக ஏற்கமாட்டோம்” என்று காட்டுக்கும் மேட்டுக்கும் இழுக்கும் தினகரனை தங்கள் ரூட்டுக்குக் கொண்டுவர என்ன செய்யப் போகிறது பாஜக?

SCROLL FOR NEXT