கார்த்திக்
திருச்சி: அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முறையிடச் சென்ற தன்னை சட்டப்பேரவை துணைத் தலைவர் தாக்கியதாக துறையூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி 23-வது வார்டு பகுதி நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக்(45). சமூக ஆர்வலரான இவர் தனது வார்டு பகுதியில் குடிநீர் விநியோகம், சாக்கடை வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி துறையூர் தொகுதி
எம்எல்ஏவும், சட்டப்பேரவை துணைத் தலைவருமான ரவி சங்கரிடம் அண்மையில் மனு அளித்துள்ளார். இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், ரவிசங்கரை கார்த்திக் செல்போனில் அழைத்ததாகவும், ஆனால் ரவிசங்கர் அழைப்பை ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து, மண்ணச்சநல்லூரில் உள்ள சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவி சங்கரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் இரவு சென்ற கார்த்திக், தனது கோரிக்கை மனுவின் நிலை குறித்து கேட்டுள்ளார்.
அப்போது ரவி சங்கருக்கும், கார்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ரவி சங்கர் தன்னை தாக்கியதாகவும், இதில் காயம் ஏற்பட்டதாகவும் கூறி மண்ணச்சநல்லூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கார்த்திக் சிகிச்சைக்காக சேர்ந்தார். மேலும், இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அதன்பின், சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவி சங்கர் அருகில் அமர்ந்தபடி கார்த்திக் பேசும் வீடியோ ஒன்று நேற்று வெளியானது. அதில் கார்த்திக் பேசும்போது, “சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவிசங்கரை நான் சந்திக்க சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தவறி விழுந்து விட்டேன். என்னை யாரும் தாக்கவில்லை” எனக் கூறியிருந்தார்.
அதன்பின், சிறிது நேரம் கழித்து கார்த்திக் மட்டும் பேசுவது போன்ற ஒரு வீடியோ வெளியானது. அதில் கார்த்திக், “என்னை சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவி சங்கர் மிரட்டித்தான் அந்த வீடியோவை எடுத்தார். ரவி சங்கரும், மண்ணச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் கிருபாநிதியும் நான் எப்படி பேச வேண்டும் என எழுதிக் கொடுத்தனர். அப்படி பேசவில்லையெனில் உன்னை உயிரோடு விடமாட்டேன் என என்னிடம் மிரட்டினர். என் உயிரையும், குடும்பத்தையும் காப்பாற்றிக் கொள்ளவே அவ்வாறு கூறினேன். என்னை பேச வைத்து ஆறு, ஏழு டேக் வீடியோ பதிவு செய்தனர். அந்த வீடியோவைத்தான் வெளியிட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.