டிடிவி தினகரன்
கோவை: தமிழகம் சிறந்த மாநிலம் என்ற நிலை மாறி சினிமா மாநிலமாகிவிட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “திராவிட ஆட்சிகளில் இந்தியாவில் முக்கியமான, வளர்ச்சியடைந்த மாநிலமாகத் தமிழ்நாடு இருந்து வந்தது. திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சி நடைபெற்றது. பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருந்தாலும், மக்கள் மாற்றத்தை விரும்பியதன் காரணமாகவும், போட்டி பொறாமை காரணமாகவும் மிகப்பெரிய தவறைச் செய்து, தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடாதவர்களை அமர்த்தியுள்ளனர். சிறந்த மாநிலமாக இருந்த தமிழ்நாடு இன்று சினிமா மாநிலமாக மாறியுள்ளது.
இளைஞர்களும், இளம் பெண்களும் சினிமா கதாநாயகன் ஒருவர் மாற்றத்தை ஏற்படுத்திவிடுவார் என்ற நம்பிக்கையில் வாக்களித்துள்ளனர். துணை சபாநாயகர் பொறுப்பில் இருப்பவர் யாரையாவது தாக்கியதாக இதுவரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வெட்கப்படக்கூடிய அளவிற்குத் தற்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.
தவெக எம்எல்ஏ ஒருவர் மாவட்ட ஆட்சியருக்குத் தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரைச் சந்திக்க முயற்சி செய்ததாகவும் தகவல்கள் வருகின்றன. ஆனால், இதுவரை ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்தவர்களையும், விஜய் ரசிகர்களாக இருந்தவர்களையும், வேறு எந்தத் தகுதியும் இல்லாதவர்களையும், தாய்மொழியான தமிழைக் கூடச் சரியாகப் பேசத் தெரியாதவர்களையும் அமைச்சர்களாக்கியுள்ளனர்.
எம்ஜிஆருடன் ஒப்பிடுவதற்கு விஜய்க்கு எந்தத் தகுதியும் இல்லை. விஜய் சினிமாவில் கதாநாயகனாக நடித்தது உண்மை தான். ஆனால், நிஜத்தில் அவர் வில்லன் என்பதை அவரே தேர்தலுக்கு முன்பு கூறியுள்ளார். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அவர்களுக்குத் தேவையான அரசியல் அனுபவம், கொள்கை, தனிமனித ஒழுக்கம் ஆகியவை முக்கியம். அசாமில் அடிப்படை இல்லாமல் ஒரு கட்சி ஆட்சி அமைத்தது. அந்தக் கட்சியின் நிலை என்ன ஆனது என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது தனிமனித ஒழுக்கம் சீர்கெட்டுள்ளது.
அரசியலில் தனிமனித ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்பதை அண்ணாவும், காமராஜரும் வலியுறுத்தியுள்ளனர். பதவியில் இருப்பவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை மக்கள் கவனிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளேன். இடைத்தேர்தல் நடக்க உள்ள ஐந்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. எனவே, அந்தத் தொகுதிகளில் அதிமுக போட்டியிடுவது தான் நியாயமாக இருக்கும்.
சண்டியர் என்ற திரைப்படத்தின் பெயருக்கும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, இந்தப் பெயர் தொடர்பான பிரச்சினை தேவையற்றது. கிருஷ்ணசாமி இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் இதுபோன்ற ஊழல் நடைபெற்றிருக்கக் கூடாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்கள் நன்கு உணர்ந்து வருகின்றனர். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது குறித்து கேட்கிறீர்கள். இந்த ஆட்சியை அப்படியே விட்டால்கூட தானாகவே கவிழ்ந்துவிடும்.
ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். அதற்காக அதிமுகவுக்கு உறுதுணையாக இருந்து முழுமையாகப் பாடுபடுவோம். பிரதமர் மோடி தொடர்ந்து பிரதமராக இருப்பதற்குக் காரணம், குஜராத்தில் சிறப்பான ஆட்சியை வழங்கியதால்தான். ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அவர் செயல்பட்டு வருகிறார். குஜராத்தில் அவர் வழங்கிய நல்லாட்சி காரணமாக இந்தியா முழுவதும் அவரது புகழ் பரவியது. விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். ஆனால், ஆறு மாதங்களிலேயே தமிழ்நாடு எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.” என்று தினகரன் கூறினார்.