சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு நெரிசலை தடுக்கவும் பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக டிஜிபி, திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி ஆகியோர் தரப்பில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: பக்தர்கள் வசதிக்காக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உடனடி பாஸ் திட்டம் நடப்பாண்டும் பின்பற்றப்படும். தீப நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டுகளிக்க கோயிலில் 26 இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளுடன் இணைந்து பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. இதை பதிந்து கொண்ட நீதிபதி, விசாரணையை நவ.27-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.