சென்னை: தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் நேற்று ஆலோசனை நடத்தினர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்துள்ளது. அரசியல் கட்சியினர் பணம், பரிசுப் பொருட்களை கொடுத்து வாக்குகளைக் கவர்வதை தடுக்க தொகுதி வாரியாக பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்படுகின்றன.
ரூ.50 ஆயிரத்துக்கும் மேல், ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, சென்னையில் வாக்குப்பதிவின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், சென்னை காவல் ஆணையர் அருண் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், பிரச்சாரத்தின்போது வேட்பாளர்கள் விதிமீறலில் ஈடுபடாமல் இருக்கவும், மீறினால் வழக்குப்பதிவு செய்வதற்கும் ஏதுவாக பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து நகர்வுகளையும் வீடியோ பதிவு செய்யும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.
முன்னதாக, புதிய தலைமைச் செயலாளர் சாய்குமாரை, தலைமை செயலகத்தில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.