படம்: நா.தங்கரத்தினம்

தமிழகம்

தீபத்தூணில் தீபம் ஏற்றாததால் பக்தர்கள் கொந்தளிப்பு - திருப்பரங்குன்றத்தில் நடந்தது என்ன?

செய்திப்பிரிவு

மதுரை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததால் கொந்தளித்த பக்தர்கள் பலரும் அரசையும், காவல் துறையினரையும் எதிர்த்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தடியடி நடத்தி பெண்கள் உள்ளிட்ட பலரையும் போலீஸார் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்ததால் பதற்றம் நிலவியது.

திருப்பரங்குன்றம் கோயிலில் சரியாக 6 மணிக்கு வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என அந்தத் தூணை பார்த்தபடி மிகுந்த எதிர்பார்ப்புடன் பக்தர்கள் இருந்தனர்.

மாலை 6.15 மணி வரை தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அ்ப்போதுதான் தீபம் ஏற்றப்படாது என்ற தகவல் பக்தர்களுக்கு கிடைத்து. இதனால் ஏமாற்றமும், விரக்தியும் அடைந்த பக்தர்கள் மிகுந்த பதற்றத்துடன் காணப்பட்டனர். இவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பினர்.

மாவட்ட ஆட்சியர், திமிழக அரசு, காவல் துறை என பல்வேறு தரப்பினரையும் விமர்சித்து தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆங்காங்கே மாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவை எப்படி நிறைவேற்றாமல் இருக்கலாம் எனக் கேட்டு முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா வெற்றி வேல் வீர வேல் என கோஷமிட்டதுடன், முதல்வர் விஜய், தவெகவுக்கு எதிராகவும் ஆவேசத்துடன் முழக்கமிட்டனர்.

திருப்பரங்குன்றம் நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பழனியாண்டவர் கோயில் அருகேயுள்ள படிக்கட்டு வழியாக பக்தர்கள், பொதுமக்கள், பாஜக, இந்து முன்னணி உள்ளிட்டோர் போலீஸார் வைத்திருந்த இரும்புத் தடுப்புகளை தள்ளிவிட்டு மலைக்கு மேல் செல்ல முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்தனர்.

மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயல்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆவேசமடைந்தனர். பெண் பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவில் மண் தரையில் அமர்ந்தும், படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில பெண்கள், மலைத்தூணில் தீபம் ஏற்றுவதை பார்க்க குழந்தைகளுடன் வந்திருந்த நிலையில் அவர்கள் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து தீபம் ஏற்றாமல் செல்ல மாட்டோம் என போலீஸாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

குழந்தைகளை முன்னிறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீஸார் அவர்களை மற்றவர்களைப் போல் அப்புறப்படுத்த முடியாமல் திணறினர். ஆனால், அவர்கள் கைதாக மறுத்தால் பெண் போலீஸார் அவர்களையும் தரையில் தரதரவென இழுத்துச் சென்று போலீஸ் வாகனங்களில் ஏற்றினர்.

அதிருப்தியடைந்த பெண்கள், கோயில் தூணில் தீபம் ஏற்ற மனமில்லாத இந்த தவெக அரசும், முதல்வர் ஜோசப் விஜய்யும் எங்களுக்கு வேண்டாம் என கொந்தளித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர், பக்தர்கள், பெண்களை போலீஸார் குண்டுக்கட்டாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். கைது செய்தவர்கள், வாகனங்களில் ஏற மறுத்து அழைத்துச் சென்ற பேருந்து, போலீஸ் வாகனங்களின் டயர்களுக்கு அடியில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கைதான வாகனங்களின் மீது ஏறி கோஷமிட்டனர். பாஜகவைச் சேர்ந்த பலரும் தமிழக அரசை கடுமையாக விமர்சித்தனர்.

போலீஸார் தரப்பில் மக்களைப் பார்த்து சட்டவிரோதமாக கூடி நிற்கக் கூடாது, உடனடியாக கலைந்து செல்லாவிட்டால் தடியபடி நடத்தப்படும் என எச்சரிக்கை பதாகையை காட்டினர். அதன் பிறகும் அங்கிருந்து கலைந்து செல்லாமல் ஆவேசமடைந்த பக்தர்கள் போலீஸ் வாகனங்களை தாக்கத் தொடங்கினர்.

போலீஸ் வேன் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் மீது போலீஸார் தடியபடி நடத்தினர். இதில் பலரும் காயம் அடைந்தனர்.

போலீஸாரின் கண்காணிப்பு, பாதுகாப்பை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தடுப்புகளை உடைத்துக்கொண்டு மலை உச்சிக்கும், கோயில் உள்பகுதிக்கும் செல்ல முயன்றதால் பதற்றமான சூழ்நிலையும், பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.

தீபம் ஏற்றாமல் நாங்கள் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதை அடுத்து, அவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு திருமண மண்டங்களில் அடைக்கப்பட்டனர்.

கோயிலுக்குள் மின்தடை ஏற்படுத்தப்பட்டது. பல ஆயிரம் பேர் குவிக்கப்பட்ட நிலையிலும், மிகவும் உணர்வுபூர்வமாக நடந்த போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். இதனால் திருப்பறங்குன்றத்தில் பெரும் பதற்றம் நிலவியது.

உச்ச நீதிமன்ற உத்தரவு செயல்படுத்தப்படாததால், அவமதிப்பு வழக்கை சந்திக்கும் சூழலில் அடுத்தடுத்து என்ன நடக்குமோ என்ற நிலையால் திருப்பரங்குன்றத்தில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT