விபத்தில் காயமடைந்தவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் வி.கே.ராஜீவ், ஆட்சியர் சிவகுரு பிரபாகரன். உள்படம்: மகேஷ்குமார்

 
தமிழகம்

சட்டவிரோதமாக மண் அள்ளிய டிராக்டர் பறிமுதலின்போது தேவிப்பட்டினம் தலைமை காவலர் விபத்தில் உயிரிழப்பு

குடும்பத்தினருக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: தே​விப்பட்​டினம் அருகே சட்​ட​விரோத​மாக மணல் அள்​ளிய டிராக்​டரை பிடித்து காவல் நிலை​யம் கொண்டு சென்ற தலை​மைக் காவலர் விபத்​தில் சிக்கி உயி​ரிழந்​தார். அவரது குடும்​பத்​துக்கு இரங்​கல் தெரி​வித்​துள்ள முதல்​வர் விஜய் நிவாரண​மாக ரூ.30 லட்​சம் அறி​வித்​தார்.

ராம​நாத​புரம் மாவட்​டம் தேவிப்பட்​டினம் அருகே தேர்​போகி கிராமத்​தில் சட்​ட​விரோத​மாக சவுடு மண் அள்​ளப்​படு​வ​தாக கிடைத்த தகவலின் அடிப்​படை​யில், நேற்று அதி​காலை சார்பு ஆய்​வாளர் சுந்​தரமூர்த்தி தலை​மையி​லான போலீ​ஸார் ச‌‌ம்பவ இடத்​துக்​குச் சென்​றனர். அங்கு சட்​ட​விரோத​மாக மண் அள்ள பயன்​படுத்​தப்​பட்ட 3 டிராக்​டர்​கள், ஒரு பொக்​லைன் இயந்​திரம் ஆகிய​வற்றை கைப்​பற்​றினர். திருட்டு மண் அள்​ளிய தேர்​போகி, பழனிவலசை கிராமங்​களைச் சேர்ந்த கார்த்​திக் ராஜா உள்​ளிட்ட 4 பேரை கைது செய்​தனர்.

அதி​காலை 4 மணி​யள​வில் பறி​முதல் செய்த டிராக்​டரை தேவிப்​பட்​டினம் காவல் நிலைய தலை​மைக் காவலர் மகேஷ்குமார் ஓட்​டி வந்தார். அப்​போது, நாகர்​கோ​விலில் இருந்து வேளாங்​கண்ணி நோக்​கிச் சென்ற அரசு விரைவு பேருந்​து, டிராக்​டரின் பின்​பகு​தி​யில் மோதி​யது. இதில் டிராக்​டரும், பேருந்​தும் கவிழ்ந்து விபத்​துக்​குள்​ளானது. படு​காயமடைந்த தலை​மைக் காவலர் மகேஷ்கு​மார் (41) அதே இடத்​திலேயே உயி​ரிழந்​தார். அரசு பேருந்து ஓட்​டுநர் பட்​டு​ராஜா, நடத்​துநர் கிருஷ்ணா மற்​றும் பயணி​கள் 11 பேர் காயமடைந்​தனர். தேவிப்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

இந்தச் சம்​பவம் குறித்து முதல்​வர் விஜய் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில், மகேஷ் கு​மாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், ரூ.30 லட்​சம் நிவாரணம் வழங்கி உத்​தர​விட்​டுள்​ளார்.இதனிடையே மகேஷ்கு​மாரின் கண்​களை குடும்பத்தினர் தான​மாக வழங்கினர். பின்​னர், அவரது உடலுக்கு அமைச்​சர் வி.கே.​ராஜீவ், டிஐஜி மணிவண்​ணன், ஆட்சி​யர் சிவகுரு பிர​பாகரன், எஸ்பி ஜி.சந்​தீஷ் ஆகியோர் மலர்​வளை​யம் வைத்து மரி​யாதை செலுத்​தினர். பின்​னர், 21 குண்​டு​கள் முழங்க காவல்​துறை மரி​யாதை​யுடன் உடல் தகனம் செய்​யப்​பட்​டது.

SCROLL FOR NEXT