நேற்று கட்சி தொடங்கி இன்று முதல்வராக வேண்டும் என சிலர் நினைக்கின்றனர் என்று தவெக தலைவர் விஜய்யை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக தாக்கிப் பேசினார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லத்துக்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று வீரமணிக்கு பொன்னாடை அணிவித்து புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: பெரியாரின் கொள்கை பேரனாக இங்கே நான் வந்துள்ளேன். பல்வேறு மாவட்டங்களில் இருந்து திராவிட கழகத்தினர் இங்கே வந்துள்ளனர். உங்களை பார்க்கும் போது எனக்கு வியப்பாக உள்ளது. ஒரு சிலர் நேற்று கட்சி தொடங்கி இன்று முதல்வராக வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் ஒரு கவுன்சிலர் பதவி கூட வேண்டாம். எங்களுக்கு கொள்கை, சமுதாய தொண்டு தான் முக்கியம் என இத்தனை ஆண்டுகள் பணியாற்றுகின்றனர்.
83 ஆண்டுகால பொதுவாழ்க்கை வாயிலாக திராவிட இயக்கத்தின் நேரடி வரலாற்று சாட்சியாக திராவிடர் கழக தலைவர் வீரமணி உள்ளார். இன்று பெரியார் கொள்கைகளை நாடு முழுவதும் பரவி உள்ளது, ஏன் உலகமே கொண்டாடி வருகிறது, இன்றைய தலைமுறையினர் பெரியாரை படிக்க ஆரம்பித்துள்ளனர், கொள்கைகளை ஏற்றுக்கொள்ள தொடங்கியுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.