தமிழகம்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்

எம்.முகம்மது ராஃபி

ராமேசுவரம்: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த மண்டலம் காரணமாக ராமேசுவரம் அருகே பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடாப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது.

தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இது செப்டம்பர் 23-ம் தேதி இரவு முதல் 24-ம் தேதி அதிகாலை வரை விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூர் இடையே வடக்கு ஆந்திரப் பிரதேசம் - தெற்கு ஒடிசா கடற்கரைகளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகக் கடக்க அதிக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்களுக்கான வானிலை எச்சரிக்கையை தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடற்பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ராமேசுவரம் அருகே பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் தங்களின் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துக் கொள்ளுமாறும் மீன்வளத்துறை சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT