தமிழகம்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

எம்.முகம்மது ராஃபி

ராமேசுவரம்: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ‘அக்வான்’ புயலாக உருவாக வாய்ப்புள்ளது. இது நவ.17-ம் தேதி மேற்கு-மத்திய வங்கக் கடல்பகுதியில் 'தீவிர புயலாகவும்' வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல் சின்னம் ஸ்ரீ விஜய புரம் (அந்தமான் தீவுகள்) நகரிலிருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 690 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 840 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 1010 கி.மீ தொலைவிலும், கோபால்பூரிலிருந்து (ஒடிசா) தெற்கு - தென்கிழக்கே 1130 கி.மீ, இலங்கை திரிகோணமலையிலிருந்து கிழக்கே 630 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இதனால் ஞாயிற்றுக்க்கிழமை தமிழக துறைமுகங்களில் பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டிணம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி, சென்னை, எண்ணூர் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

முன்னதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரையிலும் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோரங்களில் மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்றுமாறும் மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT