சென்னையில் வீடு வீடாகச் சென்று, காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் சமீரன் நேற்று ஆய்வு செய்தார். உடன், அதிகாரிகள், களப் பணியாளர்கள்.

 
தமிழகம்

சென்னையில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவுகிறது: தமிழகத்தில் 2,000 பேருக்கு சிகிச்சை

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்வர் விஜய் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 2,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ் - எஜிப்டை’ வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரிப்பதால், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சராசரியாக தினமும் 200-க் கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் சென்னையில் 79 பேர் உட்பட மாநிலம் முழுவதும் 228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இந்த மாதத்தில் மட்டும் 900-க்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். நடப்பு ஆண்டில் இதுவரை தமிழகத்தில் 17,277 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சுமார் 2,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். லேசான காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெறுகின்றனர். தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு இருந்தால், சுய மருத்துவம் செய்துகொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படு வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுகாதாரத் துறை பல்வேறு துறைகளுடன் இணைந்து டெங்கு பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

உண்ணிக் காய்ச்சல்: இதற்கிடையே, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், அதை மறுத்த சுகாதாரத் துறை, ‘ஸ்க்ரப் டைபஸ்’ என்ற உண்ணிக் காய்ச்சல் பாதிப்புதான் உயிரிழப்புக்கு காரணம் என்று தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக விடுதிகளில் தங்கிப் படித்து வரும் மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

டெங்கு அறிகுறி காணப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், அவர்கள் சொந்த ஊருக்குச் சென்று சிகிச்சை பெற்ற பின்னர் வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் 29 பேருக்கு உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன்மூலம் நடப்பு ஆண்டில் தமிழகத்தில் உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு 4,700-ஐ எட்டியுள்ளது.

முதல்வர் விஜய் அறிவுறுத்தல்: தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, வெங்கட ரமணன், நிர்மல்குமார், வினோத், ஸ்ரீநாத், தலைமைச் செயலர் மு.சாய்குமார், வருவாய் நிர்வாக ஆணையர் பி.சந்தரமோகன், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காணொலி வாயிலாக அமைச்சர் அருண்ராஜ் மற்றும் விழுப்புரம், ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், நாகை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியதாவது: மீனவர்களுக்கு வானிலை மற்றும் கடல் எச்சரிக்கைகள் உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும். புயல் பாதுகாப்பு மையங்களை பயன்பாட்டுக்கு தயாராக வைத்திருக்க வேண்டும். பள்ளிகள் உள்ளிட்ட கட்டிடங்களை தேவைக்கேற்ப நிவாரண முகாம்களாக பயன்படுத்தும் வகையில் தயார்நிலையில் வைக்க வேண்டும். மேலும், மாவட்ட அவசரகால மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் இருப்பதையும், படகுகள், உயிர்காக்கும் மிதவைகள், கயிறுகள், மின்உற்பத்தி இயந்திரங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் போன்றவையும் தயார் நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

சேமிப்புக் கிடங்குகளில் இருப்பில் வைத்துள்ள நெல் மூட்டைகள் மழைநீரால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருக்கவும், சாலைகள், மழைநீர் வடிகால்கள், பாலங்கள் ஆகியவற்றை ட்ரோன் மூலம் ஆய்வு செய்து, தேவையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் வேண்டும். பருவமழைக் காலங்களில் நோய்த் தொற்று பரவாமல் இருக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

டெங்கு தடுப்பு பணிகள்: கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் மூலம் வீடுதோறும் களஆய்வு செய்து, ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிதல் மற்றும் அகற்றுதல், கொசுப்புழு ஒழிப்பு மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் தொடர் கண்காணிப்பு போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சலை ஆரம்ப நிலை யிலேயே கண்டறிவதோடு, தேவையான ஆய்வகப் பரிசோதனைகள், நோயாளியின் மருத்துவ மதிப்பீடு, எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறிதல், உரிய நேரத்தில் சிகிச்சைக்குப் பரிந்துரை செய்தல், தீவிர டெங்கு நோயாளிகளுக்கான சிகிச்சை, தொடர் மருத்துவக் கண்காணிப்பு உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்கு அரசு மருத்துவமனைகள் தயார்நிலையில் இருக்க வேண்டும். மேலும், இந்த பணிகளை அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, எல்நினோ எனும் காலநிலை மாற்ற நிகழ்வு – பேரிடர் மேலாண்மைக்கான நிபுணர் ஆலோசனைக் குழுவின் முதல்கட்ட ஆய்வறிக்கையை முதல்வர் விஜய்யிடம் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

SCROLL FOR NEXT