சென்னை: தூத்துக்குடி ஏரல் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் ஆய்வு செய்த ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன், ஓய்வில் இருந்த மருத்துவரிடம், 24 மணி நேர பணியில் மருத்துவர் இல்லாமல் இருந்தால் நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சை அளிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியதற்கு அரசு மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சங்கம்: 24 மணி நேர பணி குறித்து தமிழக சுகாதாரத்துறை எந்த அரசாணையும் வெளியிடவில்லை. தூத்துக்குடி ஏரல் அரசு மருத்துவமனையில் தனது பணி அறையில் தங்கியிருந்தபோது, வந்த செவிலியரின் தொலைபேசி அழைப்பை ஏற்று மருத்துவர் வந்துள்ளார். நோயாளி எவரும் இல்லாததால் அவருடைய பணி அறையை மூடி உள்பக்கம் தாழிட்டு ஓய்வில் இருந்தார். அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு உள்ள 24 மணி நேர பணி முறையை ரத்து செய்து, உடனடியாக ஷிப்ட் முறையை கொண்டுவர வேண்டும்.
தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம்: ஏரல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர பணியில் இருந்த மருத்துவரை, பொதுவெளியில் குற்றம்சாட்டும் வகையில் மக்கள் பிரதிநிதி ஒருவரே தவறாக சித்தரித்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. அவசரநிலைகளில் பணி மருத்துவர் உடனடியாக பணிக்கு வரத் தயாராக இருக்கும் நிலையில், ஒதுக்கப்பட்ட பணியாளர் ஓய்வு அறையில் ஓய்வெடுப்பது அலட்சியம் அல்ல. அதனால், மருத்துவர்களுக்கு ஷிப்ட் பணியை நடைமுறைப்படுத்த தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
அரசாணை 113-ல் குறைபாடு: அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மாணவர்கள் சங்கத்தினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மருத்துவ சேவைகள் இயக்குநரகத்தின் (டிஎம்எஸ்) கீழ் உள்ள அரசு மருத்துவமனைகளில் புதிய பணியிடங்களை உருவாக்காமல், மருத்துவர்களை மாற்று நிரவல் செய்யும் வகையில் அரசாணை 113 வெளியிடப்பட்டுள்ளது. இதனால், 70 சதவீத அரசு மருத்துவமனைகளில், அனுமதிக்கப்பட்ட மருத்துவர் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை, சிறப்பு சேவைகளின் அடிப்படையில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் உறுதியளித்தும் நிறைவேற்றவில்லை. தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு அரசாணை 113-ல் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.