

சென்னை: திருமணம் செய்வதாக 15-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறித்து வந்த சென்னையைச் சேர்ந்த 39 வயது நபர் போலீஸாரிடம் சிக்கியுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார். இவர் திருமண வரன் தேடும் பிரபல இணையதளத்தில் தனது விவரங்களை பதிவு செய்திருந்தார். அப்போது கண்ணன் (39) என்பவர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். அவர், தன்னை சாப்ட்வேர் இன்ஜினியர் என்றும், சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் கூறினார்.
தனக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவியை பிரிந்துவிட்டதால், 2-வது திருமணம் செய்துகொள்ள பெண் தேடி வருவதாகவும் கூறி உள்ளார். இதனை நம்பிய கோவை பெண் கண்ணனுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். அவர் சென்னை வரும்போதெல்லாம் இருவரும் சந்தித்துள்ளனர்.
திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்த கண்ணன் அந்த பெண்ணை விடுதிக்கு வரவழைத்து பலமுறை தனிமையில் இருந்துள்ளார். பல்வேறு காரணங்களை கூறி அந்த பெண்ணிடம் இருந்து கண்ணன் சுமார் ரூ.11 லட்சம் வரை பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கண்ணனின் செல்போனை அந்த பெண் தற்செயலாக பார்த்தபோது, பல்வேறு பெண்களுடன் கண்ணன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் இருந்துள்ளன.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது கண்ணன் உரிய விளக்கம் அளிக்காமல் சமாளித்துள்ளார். தன்னைப்போல் 15-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அவர்களுடன் நெருக்கமாக இருந்து, அந்த வீடியோவை காட்டி மிரட்டி கண்ணன் பணம் பறித்ததும் தெரியவந்தது. தன்னிடம் பெற்ற ரூ.11 லட்சத்தில் ரூ.4.15 லட்சத்தை மட்டும் கண்ணன் திருப்பி கொடுத்ததாகவும், மீதமுள்ள தொகையை தராமல் ஏமாற்றியதாகவும் சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் அப்பெண் புகார் அளித்தார்.
இதுகுறித்து வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.இதில், கோவை பெண் மட்டுமின்றி சென்னை, மதுரை, பெங்களூரு, மும்பை மற்றும் கனடா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் பெண்களிடமும் கண்ணன் இதே பாணியில் பழகி ஏமாற்றியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவரால் பாதிக்கப்பட்ட பெண்களில் பலர், இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் தங்களது திருமண வாழ்க்கை மற்றும் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும் என அஞ்சி புகார் அளிக்காமல் சென்றிருக்கலாம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளான கண்ணனை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆனால், அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.