தஞ்சாவூர் மாவட்டம் மேலையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்து குவித்து வைத்துள்ள நெல்மணிகள்.
தஞ்சாவூர்: நடப்பு பருவத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு இன்னும் வெளியிடாததால், செப்.1-ம் தேதி தொடங்க வேண்டிய கொள்முதல் பணிகள் இதுவரை தொடங்கப்படாமல் உள்ளன. இதனால், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன.
தமிழகத்தில் விளைவிக்கப்படும் நெல்லை, இந்திய உணவு கழகத்துக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முகவராக இருந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்து தருகிறது. கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள், நாடு முழுவதும் பொது விநியோக திட்டத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு இந்திய உணவு கழகம் வாயிலாக மத்திய அரசு நிதி உதவியை வழங்கி வருகிறது. இந்திய உணவு கழகம் ஒவ்வொரு ஆண்டும் நெல் கொள்முதல் செய்ய கொள்முதல் பருவ காலத்தை அக்.1-ம் தேதி முதல் செப்.30-ம் தேதி வரை நிர்ணயித்து இருந்தது.
இந்தப் பருவத்தில் தமிழக விவசாயிகள் விளைவிக்கும் குறுவை, சம்பா, தாளடி, கோடை நெல் ஆகியவற்றை கொள்முதல் செய்ய நுகர்பொருள் வாணிப கழகம், கிராம அளவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்து வருகிறது.
ஆண்டுதோறும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை, ஊக்கத் தொகை ஆகியவற்றை இந்த கொள்முதல் பருவ காலத்தில் வழங்கி அமல்படுத்துவது வழக்கம்.
ஆனால், 2022-ம் ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை வழக்கமான ஜூன் 12-ம் தேதிக்கு முன்னதாகவே, அதாவது மே 24-ம் தேதி திறக்கப்பட்டது. இதனால், குறுவை சாகுபடியும் முன்கூட்டியே தொடங்கி, அறுவடைக்கு வந்ததால், தமிழக அரசுகொள்முதல் பருவத்தை அக். 1-க்குபதிலாக மத்திய அரசு அனுமதியுடன் செப்.1-ம் தேதியே கொள்முதல் செய்யத் தொடங்கியது.
அதன்பின், ஒவ்வொரு ஆண்டும், செப்.1-ம் தேதி முதல் குறுவை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது செப்.4-ம் தேதி ஆகியும் இதுவரை அரசாணை வரவில்லை எனக் கூறி, கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் தொடங்கப்படவில்லை.
அதே நேரத்தில், ஒரு சில இடங்களில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கொள்முதல் செய்தாலும், அதற்கான ரசீது மற்றும் பணம் பட்டுவாடா வழங்காமல் உள்ளனர்.
இதுகுறித்து காவிரி விவசாயிகள் சங்க பாதுகாப்பு செயலாளர் சுந்தர விமல்நாதன் கூறியது: செப்.1-ம் தேதி கொள்முதல் பணிகள் தொடங்க வேண்டிய நிலையில், 4-ம் தேதி ஆகியும் இதுவரை பணிகளை தொடங்கவில்லை.
எனவே, தமிழக அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், கடந்தாண்டு பொது ரகத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 விலை வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ரூ.2,600-ம், சன்ன ரகத்துக்கு கடந்தாண்டு ரூ.2,545 வழங்கப்பட்ட நிலையில் இந்தாண்டு ரூ.2,750-ம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதிய விலையை உடனடியாக அமல்படுத்த அரசாணை வெளியிட வேண்டும்.
இல்லை யென்றால் கொள்முதல் பருவ காலத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றார். இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் கூறியது: நெல் கொள்முதல் செய்ய நிகழாண்டுக்கான அரசாணை இதுவரை வரவில்லை.
வந்தவுடன் புதிய விலையில் கொள்முதல் செய்யப்படும். ஒரு சில இடங்களில் நெல் வரத்து அதிகமாக உள்ள பகுதிகளில், தற்போது கொள்முதல் நடைபெற்று வருகிறது. புதிய விலை தொடர்பான அறிவிப்பு வந்தவுடன் அவர்களுக்கு அதற்கான விலை வழங்கப்படும் என்றனர்.