திருநெல்வேலி: தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க கால தாமதமானதால் மனமுடைந்து தீக்குளித்த அக்கட்சி நிர்வாகி இசக்கியப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகேயுள்ள புதுமனை செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (45). தமிழக வெற்றிக்கழக கிளைச் செயலராக பொறுப்பு வகித்து வந்தார். தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்க வேண்டி, கடந்த 2 மாதங்களுக்கு முன், வேல் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தியிருந்தார்.
இந்நிலையில், தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெறாததால் ஆட்சி அமைக்க காலதாமதம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த இசக்கியப்பன் கடந்த 9-ம் தேதி வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்து, அவரை மீட்டனர்.
பின்னர் அவர், நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பழவூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இசக்கியப்பன் நேற்று உயிரிழந்தார்.