தமிழகம்

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பதிவு: தொழிலதிபர் பிரவீன் கணேசன் டெல்லியில் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ஆண்களுக்கும் பெண்களுக்கும் தேவையான அந்தரங்கப் பொருட்களை விற்பனை செய்யும் 'காமகாரட் இந்தியா', 'விண்ட்ராக இங்க', 'விண்ட் ராக்ஸ்பேஸஸ்' மற்றும் சீனாவில் 24 செட்டியார் கஃபே ஆகிய நிறுவனங்களை நடத்தி வருபவர் தொழிலதிபர் பிரவீன் கணேசன்(35). இவர் கடந்த ஜூன் மாதம் சீனாவில் இருந்தபோது, முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, அந்தப் பதிவை அவர் நீக்கினார். இது தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை தெற்கு மண்டல சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் சுஜாதா தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, சென்னை காவல் ஆணை ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், பிரவீன் கணேசனுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், நேற்று அதிகாலை ஹாங்காங்கிலிருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு பிரவீன் கணேசன் வந்திறங்கினார். அங்குள்ள குடியுரிமை அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டைச் சோதித்தபோது, அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் இருப்பதை அறிந்து அவரைத் தடுத்து நிறுத்தினர். உடனே தகவலறிந்து, சென்னை சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) துர்கா தலைமையிலான போலீஸார் டெல்லி விரைந்தனர்.

சென்னை வந்தார்: அங்கு பிரவீனை கைது செய்த போலீஸார் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை சென்னைக்கு அழைத்து வர 'டிரான்சிட் வாரண்ட்' பெற்றனர். நேற்று இரவு அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT