தமிழகம்

பெரியாறு அணையில் குறைந்து வரும் நீர்மட்டத்தால் முதல் போகத்துக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல்

நெல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்

என்.கணேஷ்ராஜ்

குமுளி: கேரளத்தில் தென்மேற்குப் பருவ மழை இன்னமும் வலுவடையாததால், பெரியாறு அணைக்கான நீர்வரத்து குறைந்து கொண்டே செல்கிறது. இதனால் ஒரு மாதத்துக்கும் மேலான நிலையில் முதல் போகத்துக்கு இதுவரை தண்ணீர் திறக்கவில்லை. ஆகவே, இந்த ஆண்டு நெல் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல்போக சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு நீர்மட்டம் 110.80 அடிக்கு கீழ் இருந்ததால் நீர் திறக்கவில்லை.

மழை தாமதமாக பெய்தாலும் அணையின் நீர்மட்டம் அதிகரித்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் பலரும் நாற்று பாவினர். ஆனால், ஒரு மாதத்துக்கு மேலாகியும் பருவமழை வலுவடையவில்லை.

இதனால் அணைக்கான நீர்வரத்து பெரியளவில் அதிகரிக்கவில்லை. இந்நிலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியி்ல் பெய்த திடீர் மழையால், கடந்த 5-ம் தேதி அணைக்கான நீர்வரத்து 1,080 கனஅடியாக உயர்ந்தது. தொடர்ந்து இதே நிலை நீடிக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடையே ஏற்பட்டது.

ஆனால், அடுத்தடுத்த நாட்களில் இதன் அளவு படிப்படியாக குறைந்து நேற்று 276 கன அடியாக சரிந்தது. நீர்மட்டமும் 112.55 அடியாக உள்ளது. முதல் போகத்துக்கு 120 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டியிருக்கும். இதற்காக 114 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்தால்தான் நீர் திறக்க முடியும்.

ஆனால் நீர்வரத்தும், நீர்மட்டமும் தொடர்ந்து உயராமல் இருப்பதால் இந்த ஆண்டு முதல்போக விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது. அக்டோபரில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும். ஆகவே, முதல் போக சாகுபடி இனி தொடங்கினாலும் அறுவடை நேரத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ரூல்கர்வ் விதிமுறையை தளர்த்தி மழைக் காலத்தில் 142 அடி அளவுக்கு நீரை தேக்க வேண்டும். அப்போதுதான், இதுபோன்று பாதிப்பு ஏற்படாது. இந்த ஆண்டு தண்ணீர் திறக்காததால், சுமார் 42 ஆயிரம் டன் நெல் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. என்று கூறினர்.

SCROLL FOR NEXT