திருநெல்வேலி: தமிழகத்தில் 32 மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் இருந்த நிலையில், தற்போது அதை 14 ஆக குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது விரைவான நீதி என்ற சட்டத்தின் அடிப்படையை தகர்க்கும் என்று வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகம் முழுவதும் நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் சென்னையிலும், அதன் கிளை மதுரையிலும் இயங்கிவருகிறது. காலாவதியான பொருட்கள் விற்பனை, கூடுதல் விலை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சேவை குறைபாட்டால் பாதிக்கப்படுவோர் நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து இழப்பீடு பெறலாம். ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான இந்த நீதிமன்றங்களில், பாதிக்கப்பட்டோர் நேரடியாக மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறவும் வழிவகை உள்ளது.
இதில், நிவாரணம் கோரும் தொகை ரூ.20 லட்சத்துக்கு உட்பட்டு இருந்தால் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம். ரூ.20 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இழப்பீடு கோரும் வழக்குகள் மற்றும் மாவட்ட நீதிமன்ற தீர்ப்பின் மேல்முறையீட்டு வழக்குகள், மாநில நுகர்வோர் ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வந்தன. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி நுகர்வோரின் புகார் மனு அல்லது மேல்முறையீட்டு மனுவை 90 நாட்களுக்குள் விசாரித்து முடித்துவைக்க வேண்டும்.
இந்நிலையில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் படி மாவட்ட நுகர்வோர் குறைதீர் நீதிமன்றங்கள், மாவட்ட நுகர்வோர் ஆணையமாக மாற்றப்பட்டன. மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றங்கள் ஆணையமாக மாற்றப்பட்டதால் மாவட்ட அளவிலேயே ரூ.1 கோடி வரையிலான நிவாரணத்தொகை கோரும் வழக்குகளுக்கு தீர்வு காண வழிவகை ஏற்பட்டது.
இதுபோல் மாநில ஆணையத்தில் ரூ.10 கோடி வரையிலான நிவாரணத் தொகை கோரும் வழக்குகளுக்கு தீர்வு காணலாம். ரூ.10 கோடிக்கு மேல் நிவாரணத்தொகை இருந்தால் மட்டுமே தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை நாட வேண்டியிருக்கும். இதன்மூலம் மாநில ஆணையம், தேசிய நுகர்வோர் ஆணையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறைவதோடு, நுகர்வோரும் அதிக தொகைக்காக மட்டுமே மேல்முறையீடு செய்ய வேண்டியிருக்கும்.
முன்பு எந்தப் பொருள் வாங்கினாலும் அந்தப் பொருளை தயாரித்த அல்லது விற்பனை செய்த நிறுவனம் எங்கு உள்ளதோ அங்குள்ள நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் மட்டுமே வழக்கு தொடர முடியும். ஆனால், தற்போது நாம் எங்கு பொருள் வாங்கினாலும், நாம் வசிக்கும் பகுதியில் உள்ள மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் வழக்கு தொடரலாம். உதாரணமாக, திருநெல்வேலியில் வசிக்கும் ஒருவர் கோவையில் உள்ள கடையில் ஏதேனும் பொருள் வாங்கி அதில் குறைபாடு ஏற்பட்டால், அவர் திருநெல்வேலியில் உள்ள உள்ள நுகர்வோர் ஆணையத்திலேயே வழக்கு தொடரலாம். இதனால் ஏராளமான நுகர்வோர் இழப்பீடு பெறமுடிந்தது.
இவ்வாறு தமிழகத்தில் 32 மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் இருந்த நிலையில், தற்போது அதை 14 ஆக குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடந்த பிப்ரவரி 11-ம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக் காட்டியும், வழக்குகள் குறைவாக பதிவு ஆவதை சொல்லியும் ஆணையங்களை இணைக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு 1 ஆணையம் மட்டுமே இனி இருக்கும். இந்த 3 மாவட்ட நுகர்வோர் வழக்குகளும் திருநெல்வேலி ஆணையத்தில் மட்டுமே விசாரிக்கப்படும்.
இவ்வாறு பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் நுகர்வோர் ஆணையங்களை இணைப்பது என்பது நுகர்வோருக்கு பல்வேறு பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்று நுகர்வோர் வழக்குகளில் ஆஜராகிவரும் திருநெல்வேலி வழக்கறிஞர் அ.பிரம்மா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை குறைப்பதால் குறைதீர் ஆணைய தலைவர் மற்றும் பணியாளர்களுக்கான வேலைப்பளு அதிகரிக்கும். விசாரணைக்கு தேதி வாங்கவே 6 மாதமாகும். ஆனால் நுகர்வோர் வழக்குகளுக்கு 90 நாட்களில் தீர்ப்பு சொல்லப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை இணைப்பதால் இனி ஒவ்வொரு வழக்கும் 2 ஆண்டுகளுக்குமேலும் இழுத்தடிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதனால் நுகர்வோர் நொந்து போவார்கள். தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் திருநெல்வேலிக்கு அலைய வேண்டும். எனவே நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை இணைப்பது என்பது செலவை குறைக்கும் நடவடிக்கை இல்லை. நுகர்வோரின் உரிமையை பறிக்கும் நடவடிக்கையாக தெரிகிறது. விரைவான நீதி என்ற நுகர்வோர் சட்டத்தின் அடிப்படையே சிதைக்கப்பட்டுவிடும். எனவே அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.