அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

 

கோப்புப் படம்

தமிழகம்

தமிழகம் முழுவதும் டிச.2-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்: திருச்சியில் பழனிசாமி பங்கேற்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தவெக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் டிசம்பர் 2-ம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்கிறார்.

‘டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு சிறிதும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, போதைப் பொருள் புழக்கம் என சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. மேகேதாட்டு பிரச்சினையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் முதல்வர் விஜய் மவுனம் காத்து வருகிறார்.

இப்படி பல்வேறு மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மவுனம் காத்து வரும் தவெக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் 85 மாவட்டங்களின் சார்பில் டிச.2-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்’ என கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டத்தில் தலைமை வகிப்போர் பட்டியலை அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டது. இதில், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பொதுத் செயலாளர் பழனிசாமி பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், கிருஷ்ணகிரி மேற்கில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் கிழக்கில் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், ராணிப்பேட்டை மேற்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தம்பிதுரை, நாமக்கல்லில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, வட சென்னை தென்கிழக்கில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், திருவள்ளூர் மேற்கில் மகளிரணி செயலாளர் பா.வளர்மதி, திருவண்ணாமலை தெற்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, திருவாரூரில் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ், நாகப்பட்டினத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மதுரை புறநகர் மேற்கில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திருவள்ளூர் தெற்கில் இன்பதுரை எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அதிமுக தலைமை அலுவலக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT