தமிழகம்

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழப்பு 23 ஆக அதிகரிப்பு

மீட்புப் பணியின்போது இன்னொரு அறை வெடித்ததால் அச்சம்

இ.மணிகண்டன்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 23 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். தம்பதி, சிறுவன் உட்பட 7 பேர் படுகாயமடைந்தனர். மீட்புப் பணி நடந்தபோது ஆலையின் இன்னொரு அறை வெடித்துச் சிதறியதில் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் 4 பேர் காயமடைந்தனர். இங்கு விதிகளை மீறி பேன்சி பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதா என்று விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவான ஆலை உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியில் கோவிந்தநல்லூரைச் சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான ‘வனஜா’ என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு அறையில் சோல்சா வெடி தயாரிக்கும் பணியின்போது உராய்வு காரணமாக திடீரென பட்டாசு மருந்துகள் வெடித்துச் சிதறின. இதனால் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் கண்ணிமைக்கும் நேரத்தில் பரவியது.

வெடிச் சத்தம் கேட்ட தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து ஆலையைவிட்டு வெளியே ஓடினர். இருப்பினும், பயங்கர வெடி விபத்தில் 4 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. அந்த அறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அவர்கள் யார் என்பது குறித்து உடனடியாக அடையாளம் காண முடியவில்லை. உடல்கள் முழுவதுமாக எரிந்ததால் ஆணா, பெண்ணா என்றுகூட அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த வச்சக்காரப்பட்டி போலீஸார் மற்றும் விருதுநகர், சாத்தூர், சிவகாசியில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் பட்டாசு ஆலைக்கு விரைந்து வந்தனர். ஆனால், பட்டாசுகளை இருப்பு வைத்திருந்த குடோனும் வெடித்துச் சிதறியதால், பட்டாசு ஆலைக்குள் மீட்புப் பணிக்காக யாரும் நெருங்க முடியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகே, மீட்புப் பணிகள் தொடங்கின. தொடர்ந்து வெடி மருந்துகள் வெடித்துச் சிதறியதால் சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு அதிர்வு உணரப்பட்டது. இதனால் அடுத்தடுத்து உள்ள பட்டாசு ஆலை தொழிலாளர்களும், அருகே இருந்த கிராம மக்களும் அச்சமடைந்தனர்.

இந்த வெடி விபத்தில் சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் (51), சாரதா (40), வீரபத்திரன் (45), இவரது மனைவி சங்கிலித் தங்கம் (40), திருத்தங்கல்லைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (56), கோவிந்தநல்லூரைச் சேர்ந்த அருண்குமார் (23), ஆதிப்பட்டியைச் சேர்ந்த வாழவந்தான் என்பவரது மகன் கதிஷ் (14) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் 7 பேரும் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸார், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்பு பணியில் 4 பேர் காயம்: கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், உடல் கருகிய நிலையிலும் 21 பேரின் உடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து, போலீஸார், தீயணைப்பு வீரர்கள், ஜேசிபி வாகனங்களின் உதவியோடு இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், இன்று இரவு சுமார் 7.45 மணி அளவில் பட்டாசு ஆலையின் இன்னொரு அறை திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், தீயணைப்பு வீரர்கள் 4 பேர் காயமடைந்தனர்.

சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, எஸ்.பி. ஸ்ரீநாதா ஆகியோர் விசாரணை நடத்தினர். விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளர் முத்துமாணிக்கத்தை தேடி வருகின்றனர்.

தகவல் அறிந்து அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் சென்று, உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். விபத்து நடந்த பட்டாசு ஆலைக்கும் சென்று பார்வையிட்டனர். தமிழக பாஜக தலைவரும், சாத்தூர் தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அமைச்சர்கள் கூறியபோது, ‘‘விதிமீறலால் இந்த விபத்து நடந்துள்ளது தெரிய வருகிறது. தேர்தல் நேரம் என்பதால், நிவாரணம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று முதல்வர் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்’’ என்றனர்.

விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலை, மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்று இயங்கி வருகிறது. இங்கு மத்தாப்பு மற்றும் சோல்சா வெடிகள் தயாரிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்க அனுமதி இல்லை. இந்த நிலையில், தடையை மீறி மணி மருந்துகளைப் பயன்படுத்தி பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். விதிமுறைகளை மீறி, விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஆலை இயங்கியது பற்றியும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT