பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 
தமிழகம்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு 25 ஆனது: உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

இ.மணிகண்டன்

விருதுநகர்: ​விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி​ விபத்​தில் மேலும் 2 பெண்​கள் நேற்று உயி​ரிழந்​தனர். இதையடுத்து உயிரிழப்பு எண்​ணிக்கை 25 ஆக உயர்ந்​தது. உடல்​களை வாங்க மறுத்து உறவினர்​கள் மறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகர் அருகே உள்ள கட்​ட​னார்​பட்டி பட்​டாசு ஆலை​ வெடிவிபத்​தில் 23 பேர் உயி​ரிழந்​தனர். இவர்​களில் 19 பேரின் உடல்​கள் நேற்று முன்​தினம் இரவு உறவினர்​களால் அடை​யாளம் காணப்​பட்​டன.

4 பேர் இது​வரை அடை​யாளம் காணப்​பட​வில்லை. இந்த விபத்​தில் பலத்த ​கா​யம் அடைந்து விருதுநகர் அரசு மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சேர்​வைக்​காரன் பட்​டியைச் சேர்ந்த பேச்​சி​யம்​மாள் (51), திருத்​தங்​கல் பஞ்​சவர்​ணம் (56) ஆகியோர் நேற்று உயி​ரிழந்​தனர். இதையடுத்து உயிரிழப்பு எண்​ணிக்கை 25 ஆனது.

சேர்​வைக்​காரன்​பட்​டி​யில் ஒரே ஊரில் ஓர் ஆண் உட்பட 19 பேர் உயி​ரிழந்​துள்​ள​தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்​கியது. மேலும், உயிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.20 லட்​சம் இழப்​பீடு வழங்க வேண்​டும், குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை வழங்க வேண்​டும். ஆலை உரிமை​யாளரை கைதுசெய்ய வேண்​டும்.

ஆலை நிர்​வாகம் சார்​பில் வழக்​க​மாக வழங்​கப்​படும் இழப்​பீட்​டுத்தொகை ரூ.5.50 லட்​சத்தை பெற்​றுத்தர வேண்​டும் என்று கோரி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினர் உடல்​களை வாங்க மறுத்து நேற்று மருத்​து​வ​மனை வளாகத்​தில் போராட்​டத்​தில் ஈடு​பட்டனர்.

இதனிடையே மாவட்ட ஆட்​சியர் சுகபுத்ரா பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, தேர்​தல் நடத்தை விதி​களை காரணம் காட்டி இழப்பீடாக ரூ.4 லட்​சத்தை தற்போது வழங்​கு​வ​தாக​ தெரி​வித்​தார். ஆனால், இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதன்தொடர்ச்சியாக அமைச்​சர் சாத்​தூர் ராமச்​சந்​திரன் வீட்​டின் அரு​கில் போலீ​ஸாரின் தடையை மீறி மறியலில் ஈடு​பட்​டனர். அவர்​களிடம் எஸ்​.பி. நாதா பேச்​சு நடத்​தினர் ஆலை உரிமை​யாள​ரை கைது செய்ய 4 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ள​தாகவும்​ தற்போது தரப்படும் இழப்​பீட்​டுத் தொகையை பெற்​றுக்​கொள்​ளு​மாறும் கூறி​னார்.

இதை ஏற்று கலைந்​துசென்​றனர். விருதுநகர் ஆட்​சி​யர் சுகபுத்ரா செய்​தி​யாளர்​களிடம் கூறுகை​யில், “இந்த விபத்​தில் உயி​ரிழந்​தோர் குடும்​பங்​களுக்கு தலா ரூ.5 லட்​சம் நிவாரணம் அறிவிக்​கப்​பட்​டுள்ளது.

பலத்த காயமடைந்​தோருக்கு ரூ.2 லட்​ச​மும், லேசான காயம் அடைந்​தோருக்கு ரூ.1 லட்​ச​மும் வழங்​கப்​படும்” என்​றார்.

SCROLL FOR NEXT