சென்னை: தமிழகத்தில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களை வடிவமைத்து, அவற்றை முழுவீச்சில் நடைமுறைப்படுத்துவதில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இந்த நிலையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 2 சதவீதம் உயர்த்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, மாநில அரசு அலுவலர்கள், ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில், கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் கணக்கிட்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது 58 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 2 சதவீதம் உயர்ந்து இனி 60 சதவீதமாக வழங்கப்படும்.
16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். இதன்மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். இதனால், ஆண்டுக்கு ரூ.1,230 கோடி தமிழக அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்படும்.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் நலன்கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் அலுவலர் ஒன்றியத்தின் தலைவர் த.அமிர்தகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தலைவர் சா.அருணன், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜான் வெஸ்லி, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத் தலைவர் ராமஜெயம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் இந்த அறிவிப்பை வரவேற்று, நன்றி தெரிவித்துள்ளனர்.