சென்னை: துறைத் தேர்வுகளில் 5 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெறாத பணியாளர்களின் தகுதிகாண் பருவத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, அவர்களைப் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் கருணை அடிப்படை உள்ளிட்ட பல்வேறு முறைகளில் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்களுக்கான தகுதிகாண் பருவத்தை, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்ட விதியின்படி, துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கலாம்.
ஆனால், 5 ஆண்டுக்குள் கட்டாயம் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறவேண்டும். இல்லையெனில் பணியாளர்களின் தகுதி காண் பருவத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்.
அவர்களைப் பணியில் தொடர்ந்து அனுமதிக்க நியமன அலுவலர்களுக்கு அதிகாரம் கிடையாது என்று அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, 5 ஆண்டுகள் கடந்தும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களின் தகுதிகாண் பருவத்தை முடிவுக்குக் கொண்டு வருவதுடன், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.