கரூர்: கரூர் அருகே கோயில் கும்பாபிஷேக விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த நடனக் கலைஞர் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்து சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் மணவாசியை சேர்ந்தவர் ஜீவா (45). நடனக் கலைஞர். கோயில் திருவிழாக்கள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்தார். கரூர் அருகேயுள்ள தொழிற்பேட்டை பகுதியில் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி நடன நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது.
மேடையில் இரவு 9.46 மணி போல நடனமாடிக் கொண்டிருந்த ஜீவா மேடையிலேயே திடீரென மயங்கி விழுந்தார். இதனால் உடன் நடனமாடிக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சிடையந்து அவரை மீட்டு அங்கிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதனால் சக நடனக் கலைஞர்கள், அப்பகுதி மக்கள் சோகமடைந்தனர். கோயில் திருவிழாவில் ஜீவா நடனமாடும் போது மயங்கி விழுந்து உயிரிழந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் மேடையில் நடனக்கலைஞர் நடனமாடும் போது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.