சென்னை: சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், பெரம்பூர் உள்பட 11 ரயில் நிலையங்களில் பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்ய சென்னை ரயில்வே கோட்டம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் ஆறு கோட்டங்களில் ஒன்றான சென்னை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள், ரயில்வே குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் குடிநீர் தரக் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: பயணிகள், ஊழியர்களுக்குப் பாதுகாப்பான, சுகாதாரமான குடிநீர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
குடிநீர் ஆதாரம் மற்றும் குடிநீர் விநியோகிக்கும் மையம் ஆகிய இரண்டிலும் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பாக்டீரியா மற்றும் ரசாயன பகுப்பாய்வு செய்யப்படுகிறது. நீரில் உள்ள எஞ்சிய குளோரின் அளவு நாள்தோறும் களப் பரிசோதனை செய்யப்பட்டு, மாறுபாடுகள் இருந்தால் உடனடியாகச் சீரமைக்கப்படுகிறது.
சேமிப்புத் தொட்டிகள், குடிநீர் குளிரூட்டிகள், குழாய்கள் மற்றும் விநியோக மையங்கள் தொடர்ந்து சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர் மற்றும் வேளச்சேரி உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்வே குடியிருப்புகளில் இந்த விரிவான தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆய்வுகள் மற்றும் தொடர் கண்காணிப்பு மூலம் உயர்தர சுகாதாரப் பராமரிப்பை வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம் இவ்வாறு அவர்கள் கூறினர்.