சென்னை: திமுகவின் மறைந்த முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவரது மகன் உட்பட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1996 - 2001-ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில் மருங்காபுரி திமுக எம்.எல்.ஏ.வாகவும், கால்நடைத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர், பி.எம்.செங்குட்டுவன். ஆட்சி மாற்றத்துக்குப் பின் அவர் அதிமுகவில் இணைந்தார்.
திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக 81 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக செங்குட்டுவன், அவரது மகன்கள் எஸ்.பன்னீர்செல்வம், சக்திவேல், மகள் மீனாட்சி, மருமகன் ராஜலிங்கம், சகோதரரின் மகள் வள்ளி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்தது. செங்குட்டுவன் மற்றும் அவரது மருமகன் ராஜலிங்கம் இறந்துவிட்டதால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை கைவிட்ட நீதிமன்றம், அவரது மகன்கள், மகள் மற்றும் சகோதரர் மகளுக்கு தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேரும் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து, அவர்களின் மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.