கள்ள ஓட்டுகளை நம்பி இருப்பதால் எஸ்ஐஆர் பணி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கசக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் ஆளும் திமுக அரசு அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு குளறுபடிகளை செய்து வருவதாகவும், இதற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் துணை போவதாகவும் அதிமுகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் திமுக அரசை கண்டித்தும், மாநகராட்சி ஆணையருக்கு எதிராகவும், ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட அதிமுக சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது: வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள், முகவரிமாறியவர்களின் பெயர்களை நீக்குங்கள் என்று நாங்களும் பல காலமாக தேர்தல் ஆணையத்தை கேட்டு வருகிறோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை இந்திய தேர்தல் ஆணையத்தில் சொன்ன பிறகு அவர்கள் தீவிர திருத்தத்தைச் செய்கிறார்கள். இதனால், இறந்தவர்களின் வாக்குகள் போய்விடும்.
இறந்தவர்களின் வாக்குகளை நீக்குவதுடன், வாக்குரிமை இல்லாமல் இருப்பவர்களுக்கு வாக்குரிமை கொடுப்பதுதான் ஜனநாயகத்தின் உண்மையான நோக்கம். இந்த ஓட்டுகளை திமுக-வினர் தேர்தல் நாளில் மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரை கள்ள ஓட்டாகப் போட்டு வந்தனர். ஒவ்வொரு தேர்தலிலும் திமுக-வுக்கு கைகொடுக்கும் ஒரே ஆயுதம் இந்த இறந்தவர்கள் மற்றும் விலாசம் மாறிப் போனவர்களின் வாக்குகள்தான்.
கள்ள ஓட்டை நம்பியே திமுக இருப்பதால்தான் இந்த எஸ்ஐஆர் ஸ்டாலினுக்கு கசக்கிறது. அதனால் தான் நாம் எஸ்ஐஆர் வேண்டும் என்கிறோம். எஸ்ஐஆர் பணியில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. அதற்கு சென்னை மாநகர ஆணையர் பக்கபலமாக இருக்கிறார். அவர் மாநகர ஆணையரா இல்லை, திமுக மாவட்டச் செயலாளரா?
தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் கொண்டுவந்த நோக்கத்தை திமுக சிதைக்கிறது. திமுக அரசுக்கு இன்னும் 4 அமாவாசைதான் இருக்கிறது. மீண்டும் அதிமுக அரசு பழனிசாமி தலைமையில் மலரும். அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு துதிபாடினால் அதற்குரிய தண்டனை கண்டிப்பாக கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், எஸ்.கோகுல இந்திரா, மாவட்டச் செயலாளர்கள் பாலகங்கா, விருகை ரவி, ஆதி ராஜாராம், தி.நகர் சத்யா, வேளச்சேரி அசோக், ஆர்.எஸ். ராஜேஷ், கந்தன், வி.எஸ்.பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.