சென்னை: காஸ் சிலிண்டர்களை முன்னுரிமை அடிப்படையில் விடுதிகளுக்கு வழங்க தமிழக ஐ.டி. விடுதி உரிமையாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில், தமிழக ஐ.டி. விடுதி உரிமையாளர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் சீதாராமன் நேற்று கூறியதாவது: காஸ் சிலிண்டர் எங்களுக்கு கிடைக்கவில்லை. அதேநேரத்தில், கள்ளச் சந்தையில் விற்பனை நடைபெறுகிறது.
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், எங்கள் விடுதிகளில் உணவின் மீதான கட்டணத்தை உயர்த்தவில்லை. கள்ளச் சந்தையில் ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட சிலிண்டர் தற்போது ரூ.8,500 ஆக உயர்ந்துள்ளது.
ரூ.6,500 ஆக இருந்த விறகு விலை ரூ.22 ஆயிரமாகவும், ரூ.8 ஆயிரமாக இருந்த அடுப்பு விலை ரூ.40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை பயன்படுத்தி அனைவரும் லாபம் சம்பாதித்து வருகின்றனர்.
நாங்கள் மட்டும் இதில் சிக்கித் தவிக்கிறோம். மத்திய அரசு கொடுக்கும் 70 சதவீதம் காஸ் சிலிண்டர் எங்கே செல்கிறது. அந்த காஸ் சிலிண்டர் பதுக்கப்படுகிறதா அல்லது கள்ளச்சந்தையில் விற்கப்படுகிறதா? மத்திய அரசு கொடுக்கும் காஸ் சிலிண்டர் விடுதி உரிமையாளர்களுக்கு சென்று சேர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மின்சார அடுப்பை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விடுதிகளுக்கான மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். மின் கட்டணத்தை குறைக்கவில்லை எனில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடந்த ஆண்டு அளித்த தீர்ப்பின்படி, விடுதிகளுக்கான மின் கட்டணத்தை இல்லங்களுக்கான கட்டணமாக மாற்றி கொடுக்க வேண்டும்.
உணவின்றித் தவிக்கும்...
தவறும் பட்சத்தில், 20 ஆயிரம் விடுதி உரிமையாளர்களும், விடுதிகளில் தங்கி பணிபுரியும் 20 லட்சம் ஆண்,பெண்கள், மாணவ, மாணவிகள் உணவின்றித் தவிக்கும் அபாய நிலை ஏற்படும்.
எனவே, மத்திய,மாநில அரசுகள் இதற்கான தீர்வை காண வேண்டும். காஸ் சிலிண்டர்களை முன்னுரிமை அடிப்படையில் விடுதிகளுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.