தமிழகம்

டிட்வா புயல்: நாகையில் நீடிக்கும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

செய்திப்பிரிவு

நாகை: நாகை மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக இன்று மதியம் 12 மணி வரை 94 சென்டிமீட்டர் அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.

மாநிலத்தில் மிக அதிகபட்சமாக நேற்று இரவு தொடங்கி இன்று மதியம் வரை கோடியக்கரை பகுதியில் 31.20 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறையில் 20 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதேபோல திருப்பூண்டியில் 20 சென்டிமீட்டர், வேளாங்கண்ணியில் 18 சென்டிமீட்டர், நாகையில் 17 சென்டிமீட்டர், வேதாரண்யத்தில் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.

டிட்வா புயல் காணமாக நாகை மாவட்டத்தில் அதி கனழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், நாகை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று பகலிலும் இடைவிடாத கனமழை தொடர்ந்தது. இதனை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகளைச் சேர்ந்த 115 வீரர்கள் நிலைமையை சமாளிக்க தயார் நிலையில் உள்ளனர்.

நாகையில் இரவு முதல் கொட்டி தீர்க்கும் கனமழையால் நாகூர் வள்ளியம்மா நகர் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுந்தது. சுமார் 50 குடும்பங்கள் வாழும் இந்த பகுதியில் பத்து வருடங்களுக்கு மேலாக முறையான வடிகால் வசதி இல்லாமல் மழை காலங்களில் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். உடனடியாக துறை சார்ந்த அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தற்போதைக்கு முகாம்களில் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

டிட்வா புயல் சின்னம் காரணமாக நாகை மாவட்டத்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. காற்றின் வேகமும் கடலோரப் பகுதிகளில் அதிகரித்துள்ளது. மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, டாட்டா நகர், ஆரியநாட்டுத் தெரு, செருதூர், காமேஷ்வரம் , கல்லார், மணியன் தீவு, செருதலைகாடு, வானவன் மகாதேவி, புஷ்பவனம், கோடியக்கரை உள்ளிட்ட 27 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 3500 நாட்டு படகுகள், 750 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பாக படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT