சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள அக்வான் புயல் வலுவடைந்து, நவ.20-ம் தேதி ஆந்திர கடற்கரையை மிகத் தீவிரப் புயலாக கடக்கவுள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூரில் நாளை (நவ.19) கனமழை பெய்யக்கூடும்.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி வி.ஆர்.துரை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திங்கள்கிழமை (நவ.16) தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து அதேநாள் அக்வான் புயலாக வலுப்பெற்று தெற்கு வங்கக்கடல் மத்தியில் நிலவியது.
இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து செவ்வாய்க்கிழமை காலை (நவ.17) அதே பகுதியில் நிலவியது. இது மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாக வலுப்பெறவுள்ளது. மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நவ.19-ம் தேதி காலை மிகத் தீவிரப் புயலாகும்.
இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நவ.20-ம் தேதி நண்பகல் நெல்லூர் - துனி இடையே ஆந்திர கடற்கரையை மிகத் தீவிரப் புயலாக கடக்கக்கூடும். அப்போது மணிக்கு 120 முதல் 130 கிமீ வேகத்திலும், இடையிடையே மணிக்கு 145 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
புயல் காரணமாக, நவ.18-ம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். நவ.19-ம் தேதி சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும். இதுதவிர மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதன்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
வடதமிழக கடலோரப் பகுதிகளில் நவ.21-ம் தேதி வரையும், தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நவ.18-ம் தேதி வரையும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நவ.19-ம் தேதி வரையும், மத்திய மேற்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நவ.18-ம் தேதி வரையும் பலத்த சூறாவளி காற்று வீசும்.
இதுதவிர, ஆந்திர கடலோரப் பகுதிகளில் நவ.20-ம் தேதி 145 கிமீ வேகம் வரை மிக பலத்த சூறாவளி காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.