சென்னையில் நடந்த தமிழ்நாடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு இயக்கம் மற்றும் வேலை வழங்குவோர் கூட்டாண்மை மாநாட்டில் பங்கேற்ற வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் சுரேந்தர் பகத், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் கிராந்தி குமார் பாடி, தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஷனாஸ் இலியாஸ், புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு அலுவலர் (தமிழ்நாடு) ராஜ்குமார். | படம்: எஸ்.சத்தியசீலன் |
சென்னை: “வேலைக்காகக் கம்போடியா, லாவோஸ் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளுக்குச் செல்லும் இந்திய இளைஞர்கள், ‘சைபர் ஸ்லேவரி’ எனப்படும் ஆபத்தான இணைய அடிமைத்தனத்தில் திட்டமிட்டுச் சிக்க வைக்கப்படுகிறார்கள்” என புலம் பெயர்ந்தோர் பாதுகாப்பு அலுவலர் ராஜ்குமார் எச்சரித்துள்ளார்.
சென்னை வெளிநாட்டுக்குச் செல்வோர் பாதுகாப்பு அதிகாரி அலுவலகம், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து நடத்தும், ‘தமிழ்நாடு வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வேலை அளிப்போர் கூட்டாண்மை உச்சி மாநாடு’ சென்னையில் நேற்று தொடங்கியது.
இதில் தமிழகம் முழுவதிலும் உள்ள தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 1,000 மாணவர்கள், சென்னையில் உள்ள தூதரக அதிகாரிகள், மத்திய-மாநில அரசு அலுவலர்கள், வேலை அளிப்போர் மற்றும் ஆள்சேர்ப்பு முகவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பு அதிகாரி ராஜ்குமார் பேசியதாவது: வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்கள் பாதுகாப்பான வேலையைப் பெறுவதை நாங்கள் உறுதி செய்கிறோம்.
இந்தியாவில் ‘இமிக்ரேஷன்’ (Immigration) என்பது மிகவும் பிரபலம். ஆனால் ‘எமிக்ரேஷன்’ என்பது இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்களைக் குறிக்கும். எங்கள் அலுவலகம் 1847-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கப்பட்டது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்கள் மூலம் மட்டுமே வெளிநாடு செல்ல வேண்டும். இதை வலியுறுத்தவே கடந்த ஆண்டு ‘பார்த்துப் போங்க’ பிரச்சாரத்தைத் தொடங்கினோம்.
குறிப்பாக, கம்போடியா, லாவோஸ், மியான்மர் போன்ற நாடுகளில் படித்த இளைஞர்கள் ‘சைபர் ஸ்லேவரி’ எனப்படும் இணைய அடிமைத்தனததில் சிக்க வைக்கப்படுகிறார்கள்.
கஸ்டமர் கேர் வேலை என்று அழைத்துச் செல்லப்பட்டு, அவர்கள் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். கடந்த ஓராண்டில் இந்தப் பிரச்சாரத்தின் மூலம் இத்தகைய பாதிப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன. இப்போது ‘பார்த்துப் போங்க 2.0’ திட்டத்தைத் தொடங்குகிறோம்.
இதில் இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சாட்போட் மூலம் ‘Hi’ என்று மெசேஜ் செய்தாலே அனைத்துத் தகவல்களையும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த மாநாட்டில், வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் சுரேந்தர் பகத், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் கிராந்தி குமார் பாடி, தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஷனாஸ் இலியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.