திருப்பூர்: திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், தவெக சார்பில் அதிமுக முன்னாள் எம்.பி. வி.சத்தியபாமா ஆகியோர் களமிறங்கியுள்ளதால் இந்தத் தொகுதி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளும், 10 ஊராட்சிகளும் அடங்கியுள்ளன. இத்தொகுதியில் பின்னலாடை உற்பத்தி, சாய மற்றும் சலவை ஆலைகள், பிரிண்டிங் பட்டறைகள், விவசாயம் ஆகியவை முக்கியத் தொழில்களாக உள்ளன.
இத்தொகுதியில் கடந்த 3 முறை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.
அதிலும் குறிப்பாக கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.எம்.ஆனந்தன் தமிழகத்திலேயே அதிகப்பட்சமாக 73,271 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமைச்சரவையிலும் இடம் பெற்றார்.
இதன் பின்னர் 2016, 2021-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.என்.விஜயகுமார் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் பல்லடம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எஸ்.எம். ஆனந்தன், இம்முறை தனது சொந்தத் தொகுதியான திருப்பூர் வடக்குத் தொகுதியில் களமிறங்கியுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த வி.சத்தியபாமா திருப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரான இவர், அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். திருப்பூர் வடக்கு தொகுதியில் தவெக வேட்பாளராக சத்தியபாமா தற்போது களமிறக்கப்பட்டுள்ளார்.
திமுக கூட்டணியில் இம்முறை திருப்பூர் வடக்கு தொகுதி கூட்டணிக் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளர் எம்.ரவிக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திமுக, காங்கிரஸ், தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இவரது பலமாகக் கருதப்படுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பூர் பெரிச்சிபாளையத்தைச் சேர்ந்த ஆர்.அபிநயா போட்டியிடுகிறார். உள்ளூர் வேட்பாளர் என்பது இவரது பலமாக உள்ளது.
திருப்பூர் வடக்கு தொகுதியில் மாநகரின் பெரும்பாலான பகுதிகள் அடங்கியுள்ள நிலையில், குப்பை பிரச்சினை, மாநகராட்சி வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பின்னலாடைத் தொழிலில் நிலவும் நூல் விலை உயர்வு, மூலப்பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்டவை இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.
அதோடு அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்பியும் திருப்பூர் வடக்கில் களமிறங்கியுள்ளதால் இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்தை பெற்ற தொகுதியாக மாறியுள்ளது.
திருப்பூர் வடக்கு தொகுதியில் ஏற்கனவே ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றுள்ள அதிமுக, இம்முறையும் அதனைத் தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.