சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச் சேவையை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் மக்கள் நல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
பிரதமர் மோடியின் இளமைக்கால வாழ்க்கை, அவரது ஆன்மிகத் தேடல், மத்திய அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் நலத்திட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் தெருக்கூத்து, குறுநாடகங்கள், கிராமியக் கலை நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளின் வாயிலாகப் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கவும், சேவை மற்றும் உறுதிமொழி இயக்கத்தை முன்னெடுக்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.