தமிழகம்

“எம்ஜிஆர் - ஜெயலலிதா படங்களைப் போட்டால் மட்டுமே ஓட்டு வந்துவிடாது!” - தவெக சி.டி.ஆர்.நிர்மல்குமார் நேர்காணல்

துரை விஜயராஜ்

தவெக-வில் புதிதாக இணைந்திருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் இன்னமும் தனது சட்டைப் பையில் ஜெயலலிதா படத்தை வைத்திருக்கும் நிலையில், “எம்ஜிஆர் - ஜெயலலிதா படங்களைப் போட்டால் மட்டுமே ஓட்டு வந்துவிடாது” என வெளிப்படையாகப் பேசி இருக்கிறார் தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார். இது தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’க்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து...

தவெக இன்னும் விஜய் ரசிகர் மன்றமாகத்தான் இருக்கிறது எனச் சொல்கிறதே பாஜக?

பாஜக தமிழக அரசியலிலும், மக்கள் மனதிலும் இல்லாத ஒரு கட்சி. இத்தனை தேர்தல்களாக பாஜக-வால் தமிழகத்தில் தனித்து நின்று ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியவில்லை. இன்னும் 50 ஆண்டுகள் போனாலும் அவர்களுக்கு இதே தான் நிலை. அதேசமயம், பெருவாரியான மக்களின் ஆதரவை தக்கவைத்திருப்பவர் எங்கள் தலைவர். எங்களுடைய வெற்றி, எங்களுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு எல்லாமே தேர்தலுக்குப் பிறகு தெரியும்.

திமுக அரசின் ஊழலையும் தவறுகளையும் பாஜக தான் முதலில் தைரியமாகத் தட்டிக் கேட்கிறதாமே..?

யார் தட்டிக் கேட்பது என்பது முக்கியமல்ல. ஆக்கபூர்வமாக என்ன செய்தோம் என்பது தான் முக்கியம். தட்டிக்கேட்டு இதுவரை என்ன நடந்திருக்கிறது? மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எந்த விசாரணை அமைப்பாவது இதுவரை ஊழல் திமுக அமைச்சர்கள் யாருக்காவது தண்டனை பெற்றுத் தந்திருக்கிறதா? திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்பவர்கள் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள்?

அனுபவம் வாய்ந்த தலைவர்கள் தவெக-வில் இல்லாதது தேர்தலில் உங்களுக்குப் பலவீனம் தானே?

அனுபவம் என்று எதைச் சொல்கிறீர்கள்... ஊழல் செய்வதையா? திமுக-வில் ஒரு அமைச்சரோ, எம்எல்ஏ-வோ மக்கள் ஆதரவு பெற்ற தலைவராக இருக்கிறார்களா? ஊழல் செய்வதையும் கொள்ளை அடிப்பதையும் தெரிந்து வைத்திருப்பது எல்லாம் அனுபவம் கிடையாது. தங்கள் குடும்பத்துக்கு சொத்துச் சேர்ப்பதற்காக கொள்ளை அடிக்கும் திட்டத்துடன்தான் திமுக அமைச்சர்கள் தலைமை செயலகமே செல்கிறார்கள். அதேசமயம் மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணமிருந்தால் யார் வேண்டுமானாலும் அரசு நிர்வாகத்தை நடத்தலாம்.

அரசியலில் இருந்து ஓய்வுபெறும் சமயத்தில் செங்கோட்டையன் தவெக-வுக்கு வந்திருப்பதால் எந்த மாற்றமும் நடக்கப் போவதில்லை என்கிறதே உங்களின் எதிரணி?

செங்கோட்டையனை விட வயதில் மூத்தவர்கள் தான் அந்தக் கட்சிகளில் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஓய்வு கொடுத்துவிட்டு வீட்டில் உட்கார வைப்பார்களா? செங்கோட்டையனின் வயதுக்கு சமமானவர் தான் ஸ்டாலின். ஸ்டாலினுக்கு ஓய்வு கொடுத்து விடுவார்களா? அரசியலுக்கு வயது என்பதே கிடையாது. அந்தப் புரிதலே இல்லாதவர்களுக்கு அரசியல் பற்றி ஏதும் தெரியாது என்று தான் அர்த்தம்.

எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களை உச்சரித்தால் மட்டும் அதிமுக அனுதாபிகளின் ஓட்டு தவெக-வுக்கு வந்துவிடாது என்று வரும் விமர்சனம் பற்றி..?

யாருடைய அனுதாபிகளின் ஓட்டுக்காகவும் நாங்கள் எதையும் செய்யவில்லை. அப்படியானால் மொத்த ஓட்டுகளும் முதலில் ஓபிஎஸ்ஸுக்கும் டிடிவி-க்கும் தானே போயிருக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களைப் போட்டால் மட்டுமே ஓட்டுகள் வந்துவிடாது. மக்கள் யாரை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதில் தான் இருக்கிறது. எப்படி, தனி ஆளாக நின்று 1967, 1977-ல் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தார்கள் என்பதை உதாரணப்படுத்தவே அண்ணா, எம்ஜிஆர் பெயர்களைப் பயன்படுத்தினோம்.

இதுவரை அண்ணா, எம்ஜிஆர் பெயரை உச்சரித்து வந்த நீங்கள், செங்கோட்டையன் வந்த பிறகு ஜெயலலிதா பெயரையும் உச்சரிக்க ஆரம்பித்துவிட்டீர்களே?

நாங்கள் ஜெயலலிதாவை பற்றி பேசவில்லை. அவரது பெயரையும் பயன்படுத்தியது இல்லை. செங்கோட்டையன் 52 ஆண்டுகளாக ஒரு கட்சியில் இருந்துவிட்டு, இப்போது தவெக-வுக்கு வந்திருக்கிறார். தன்னை அரசியலில் வளர்த்துவிட்ட ஜெயலலிதாவின் படத்தை அவர் வைத்திருப்பது அவரது தனிப்பட்ட விருப்பம். ஜெயலலிதா எங்கள் கொள்கைக்கோ, அரசியலுக்கோ முரண்பாடு இல்லாத தலைவர்.

தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடக்கிறதா?

தேர்தல் அறிக்கை தொடர்பாக எங்கள் தலைவர் பல மாதங்களாக பல்வேறு தரப்பிடம் ஆலோசித்து வருகிறார். அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கொடுக்கக்கூடிய வாக்குறுதிகள் நிச்சயம் மக்கள் பாராட்டும் வகையிலும் அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையிலும் இருக்கும்.

கொங்கு மண்டலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதால் அங்கே செங்கோட்டையன் சொல்பவர்களுக்குத்தான் சீட் என்கிறார்களே..?

இதையெல்லாம் தலைவர் தான் முடிவு செய்வார். செங்கோட்டையனின் அனுபவம் கட்சியில் பல கட்டத்தில் எங்களுக்கு உதவியாக இருக்கும். நிச்சயம் அவர் கொடுக்கும் பரிந்துரைகளை தலைவர் பரிசீலித்து முடிவெடுப்பார்.

பாஜக, அதிமுக-வில் பயணம் செய்திருக்கும் நீங்கள், தவெக-வில் என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?

ஒரு தலைவரை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்னொன்று, மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற தெளிவு தலைவர் களுக்கு இருக்க வேண்டும். இந்த இரண்டும் இருந்தால் தான், அரசியல் பயணத்தில் நமக்கு ஒரு தெளிவு இருக்கும். ஆனால், எதை நோக்கிப் பயணிக்கிறோம் எனத் தெரியாமலேயே பாஜக-வும், மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஒரு தலைவராக பழனிசாமியும் இருக்கிறார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மக்களிடம் இருந்து விலகி வருகிறது அதிமுக. இப்போது அனைத்துத் தரப்பு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரே தலைவர் விஜய் மட்டுமே.

SCROLL FOR NEXT