தமிழகம்

மேகமலை சோதனைச் சாவடிகளில் வனக்கிராம மக்களுக்கு அதிகரிக்கும் நெருக்கடிகள்

செய்திப்பிரிவு

வருசநாடு: மேகமலை வனக்கிராம மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் நிலையில், இங்குள்ள சோதனைச் சாவடிகளில் தற்போது நெருக்கடிகள் அதிகரித்துள்ளன.

மேகமலைப் பகு​தி​யில் 5,072 ஹெக்​டேர் பரப்பை 4,601 பேர் ஆக்கிரமித்​துள்​ள​தாக நீதி​மன்​றப்பதி​வில் குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. இவர்​களில் 1,595 பேர் நிரந்தர வீடும், காடு சார்ந்த வாழ்​வா​தா​ர​மும் கொண்​ட​வர்​கள், 233 பேர் தற்​காலிக வீடும், காடு சார்ந்த வாழ்​வா​தா​ரம் கொண்​ட​வர்​கள், 2,773 பேர் காட்​டில் விவ​சா​யத்தை மட்​டுமே சார்ந்​தவர்​கள் என தமிழக அரசு வகைப்​படுத்​தி​யுள்​ளது.

இவர்களை மூன்று வகையாக வகைப்படுத்தி வனத்தில் இருந்து வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் அடுத்தடுத்து தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் வனத்துறையின் கட்டுப்பாடுகள் இங்கு அதிகரித்துள்ளன. மலைக்கிராமங்களைக் கண்காணிக்க கொம்புக்காரன்புலியூர், மஞ்சனூத்து, மல்லப்புரம் உள்ளிட்ட இடங்களில் பிரதான சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு திருமண நிகழ்ச்சிக்காக செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு சீர்வரிசை கொண்டு செல்லும் பொருட்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. விவசாய இடுபொருள், வேளாண் கருவிகள் கொண்டு செல்லும் வாகனங்கள் குறித்த கணக்கெடுப்பும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வனக்கிராமங்களில் உள்ள உடல்நலம் பாதித்த உறவினர்களைச் சந்திக்கச் செல்வதிலும் நேரக்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. இவை அனைத்தும் ஒரு மாதத்துக்கு முன்பு இயல்பாக நடந்த நிகழ்வாகும். ஆனால், சில வாரங்களாக கட்டுப்பாடு என்ற பெயரில் வனகிராம மக்களுக்கு நெருக்கடி தரப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஏற்கெனவே வளர்ச்சித் திட்டப்பணிகள் இங்கு முடக்கப்பட்டுள்ளன. மின்துண்டிப்பு, அடிப்படை வசதிகளை சீர்செய்யாதது என்று அடுத்தடுத்த நெருக்கடி ஏற்பட்டுவரும் நிலையில் சோதனைச் சாவடிகளிலும் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன என்றனர்.

SCROLL FOR NEXT