தமிழகம்

போக்குவரத்து விதிகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

செய்திப்பிரிவு

சென்னை: விபத்து உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் ,போக்குவரத்து விதிகள் குறித்து மாணவர்களுக்கு, போக்குவரத்து போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து, மாணவர்களிடையே சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்கு வரத்து விதிகளை மேம்படுத்த சென்னை போக்குவரத்து போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சென்னை முழுவதும் உள்ள ஏராளமான பள்ளிகளில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சிகளில், விபத்து உயிரிழப்பு மற்றும் விபத்துகளைத் தவிர்க்க போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம், பாதுகாப்பாக சாலையைக் கடக்கும் முறைகள், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.

மேலும், இந்த விழிப்புணர்வு செய்திகளை தங்களது பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மதித்து நடப்போம் என்றும், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்றும் மாணவர்கள் உறுதியேற்றனர். சாலை விபத்துகளைக் குறைத்து, உயிர்களைக் காக்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும் என, போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT