சென்னை: டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம் என்ற யோசனையை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: “எல்லோரும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுங்கள். வங்கிகளுக்கு அலைய வேண்டாம்.” என்றார் பிரதமர் நரேந்திர மோடி. இதையொட்டி தொடர்ந்து விளம்பரம் செய்து கொண்டே இருந்தார்.
இது பொதுமக்கள் மீதான அக்கறை என்று கருதினோம். இப்போது, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது மத்திய அரசு.
பிரதமர் மோடி எதைச் சொன்னாலும் அதில் மக்கள் நலன் கடுகளவும் இருக்காது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாக அமைந்திருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம் என்ற யோசனையை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.