

சென்னை: சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் தேமுதிக உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள் கொள்முதல் செய்யப்படாமல் திறந்தவெளியில் கிடப்பதால் லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உடனடியாக நெற்பயிர்களை கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி பிரச்சினை, மேகே தாட்டு விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தைகூட்ட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக முதல்வர் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் எத்தனை எம்.பி.க்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரியவில்லை. காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடக முதல்வருடன் தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்துவதை எதிர்க்க தேவையில்லை. தமிழக விவசாயிகளுக்காக கர்நாடக முதல்வரை தமிழக முதல்வர் சந்திப் பதில் தவறு கிடையாது.
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அனைத்து கட்சி குழுவினருடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
அதேபோல் முதல்வர் விஜய்யும் காவிரி, மேகேதாட்டு பிரச்சினை தொடர்பாக கட்சி வேறுபாடு பாராமல் அனைத்து கட்சி குழுவினருடன் சென்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேச வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.