மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்.
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை: “தமிழகத்துக்கு எதிராக மோடி அரசு எத்தனை படையெடுத்தாலும் தவிடுபொடியாக்குவோம்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் பெயர் மாற்றம் மற்றும் இதற்கு ஆதரவளிக்கும் அதிமுகவை கண்டித்து மதுரை முனிச்சாலை சந்திப்பில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி தலைமை வகித்தார். அதில் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் பேசியது: “2005-ல் கிராமப் புறங்களில் வறுமையை போக்கும் விதமாகவும், புலம் பெயர்தலை தவிர்க்கவும், மக்களை அவரவர் கிராமங்களில் வாழவைக்கவே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் இயற்றப்பட்டது. 2006-ல் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதன்மூலம் மக்கள் புலம் பெயர்தல் குறைந்தது. கிராம பெண்கள் அதிக வேலை வாய்ப்பை பெற்றனர். 2016-ல் மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இத்திட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அடுக்கடுக்கான நடவடிக்கையால் இத்திட்டத்தை சிதைத்து, சீரழித்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 18-ம் தேதி இத்திட்டத்துக்கு எதிராக புதிய சட்டத்தை இயற்றியுள்ளனர். இந்திய குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளார். காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு 75 ஆண்டுக்கு பிறகும், அவர் மீதான வன்மம், வெறுப்பு மதவாத கும்பலுக்கு இன்னும் குறைவில்லை என்பதன் வெளிபாடு. கெட்ட நோக்கமே காந்தி பெயரிலுள்ள திட்டம் மாற்றப்பட்டுள்ளது.
மக்களுக்கான திட்டத்தில் கூட அவர் பெயர் இருக்கக் கூடாது என மோடி அரசு கருதுகிறது. ரூபாய் நோட்டிலும் அவரது பெயரை நீக்குவர். தேசத்தின் விடுதலைக்காக உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்த காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகே, விடுதலைப் போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
ஏற்கெனவே 100 நாள் என்பதை 125 நாளாக மாற்றியுள்ளோம் என்கிறார். 100 நாள் இருந்தபோது, 25 நாட்கள் மட்டும் வேலை வழங்கினர். 100 நாளுக்கு மத்திய அரசு சம்பளம் வழங்கவில்லை. ஆண்டுக்கு 100 நாள் ஒரு குடும்பத்திற்கு வேலை வழங்கவில்லை என்றால் அதற்கான நிவாரணம் வழங்கவேண்டும் என்பது சட்டம். 125 நாட்கள் வேலை வழங்க முடியாது. இது, பேப்பரில் மட்டும் எழுதப்பட்டுள்ளது தவிர, நடைமுறைக்கு வராது.
100 சதவீதம் நிதி ஒதுக்கீடு இருந்தபோது, 100 நாள் வேலை வழங்கவில்லை. தற்போது 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசும் வழங்குகிறது. நிதிச் சுமையால் மாநில அரசுகளால் வழங்காமல் போனால், மத்திய அரசும் வழங்காது. இதனால் எப்படி 125 நாள் வேலை வழங்க முடியும்?
மொத்தமாக கிராமப்புற ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் காரியத்தை புதிய சட்டம் மூலம் மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. இத்தகைய மோசமான சட்டத்தை அதிமுக ஆதரிக்கிறது.
எடப்பாடி பழனிசாமியின் பதவி ஆசை மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. ஆசை அவரது கண்ணை மறைக்கிறது. மோடி அரசு தமிழகத்துக்கு எதிராக எதைச் செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது பழனிசாமியின் ஒரே கொள்கை. இதற்காகவே அதிமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கிறோம்.
இந்நிலையில், ஒரு கூட்டம் இந்த இடத்தில்தான் தீபம் ஏற்றவேண்டும் என பிரச்சினையை முன்வைத்து தமிழகத்தை கலவர பூமியாக்க முயற்சித்தது. இதை முறியடித்த தமிழக முதல்வரை பாராட்டுகிறேன். உயர் நீதிமன்றமே உத்தரவிட்டாலும் அது மக்கள் ஒற்றுமைக்கும், மதநல்லிணக்கத்துக்கும் எதிராகவும் இருப்பதால் ஒருபோதும் தீர்ப்பை அமல்படுத்த முடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்தார்.
இருப்பினும் ஒரு கும்பல் தலை கீழாக நின்று உரிய இடத்தில் தீபம் ஏற்றவேண்டும். சிக்கந்தர் தர்காவை இடித்து தரைமட்டமாக்கி, 2026 தேர்தலை திருப்பரங்குன்றத்தில் இருந்து தொடங்குவதே திட்டம். இந்தத் திட்டத்தை தமிழக அரசு முறியடித்துள்ளது. நீதிபதிகளை கெட்ட நோக்கத்துக்காக பயன்படுத்துகின்றனர். வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றிய பிறகும் இன்னும் தீபம் ஏற்றவில்லை என ஒரு கும்பல் பிரச்சாரம் செய்கிறது.
எதற்காக புதிதாக ஒரு தூணில் தீபம் ஏற்றவேண்டும் என நீதிபதி உள்ளிட்ட யாரும் காரணம் தெரிவிக்கவில்லை. தற்போது மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பை திமுக அரசு மீறிவிட்டதாக கூறுகின்றனர். நீதிபதியே சொல்லிவிட்டார் என்பதற்காக எந்த தீர்ப்பையும் அமல்படுத்தவேண்டும் என்பது கிடையாது. திருப்பரங்குன்றம் பிரச்சினையில் மதச்சார்பின்மைக்கு மதுரை மக்கள் ஒற்றுமையாக நின்றிருக்கின்றனர். இதற்காக அவர்களை பாராட்டுகிறேன்.
தமிழகத்துக்கு எதிராக மத்திய பாஜக, மோடி அரசு எத்தனை படையெடுத்தாலும் அத்தனையும் தவிடு பொடியாக்கும் வல்லமை திமுக கூட்டணி கட்சிகளுக்கு உண்டு. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும்” என்று பெ.சண்முகம் பேசினார்.