இடதுசாரி இயக்கத்தின் மூத்த ஆளுமையாகவும், அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் கொண்டவருமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர், ஜி.ராமகிருஷ்ணன், தமிழக அரசியல் களம், 2026 சட்டப்பேரவை தேர்தல், மற்றும் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ‘ஜனநாயகத் திருவிழா’வுக்கு அளித்த பேட்டி:
அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என ஆளுமைமிக்க தலைவர்களின் ஆட்சி காலங்களைப் பார்த்தவர் நீங்கள். அன்று இருந்த அரசியல் நாகரிகத்திற்கும், இன்றைய டிஜிட்டல் கால தனிநபர் விமர்சன அரசியலுக்கும் இடையே உள்ள தர வீழ்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அரசியல் மற்றும் தேர்தல் களம் என்பது மக்கள் நலன் சார்ந்த பொருளாதார, சமூகப் பிரச்சினைகளை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். அதன் மீது அரசியல் கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தால் தான் வாக்காளர்கள் சரியான முடிவை எடுக்க முடியும். அதை விடுத்து, தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடுவது ஆரோக்கியமான அரசியல் அல்ல. இந்தத் தர வீழ்ச்சியை அனைத்துக் கட்சிகளுமே தவிர்க்க வேண்டும்.
தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தல் என்று வரும்போது மற்ற பெரிய கட்சிகளை சார்ந்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. கம்யூனிஸ்ட்கள் எங்கே தவற விடுவதாக நினைக்கிறீர்கள்?
தேர்தல் வெற்றியை மட்டும் வைத்து கட்சியின் பலத்தை அளவிடுவது சரியான அணுகுமுறை அல்ல. அதேநேரம் தேர்தல் நேரத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கு ஏற்ப நாங்கள் தேர்தல் யுக்திகளை உருவாக்குகிறோம். 2026 தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே முக்கியமான பிரச்சினை. மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் தனித்து பாஜகவை தோற்கடிக்க முடியாது. இப்பின்னணியில் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது.
உலகளவில் வலதுசாரி சித்தாந்தம் மக்களிடம் அதிக வரவேற்பை பெறுவதை சமீப காலமாக பார்க்க முடிகிறதே. இதற்கான காரணம் என்ன? இடதுசாரி சித்தாந்தத்தின் வீழ்ச்சிக்கு இது வழிவகுக்குமா?
நவதாராளமய பொருளாதாரக் கொள்கைகள் மக்களிடையே பெரும் ஏற்றத்தாழ்வை உருவாக்கியிருக்கின்றன. இதனால் ஏற்பட்ட அதிருப்தியை பயன்படுத்தி, இனவெறி மற்றும் மதவெறியை தூண்டி வலதுசாரிகள் வளர்கிறார்கள். ஆனால் இவைகளை எதிர்த்து உலகளவில் இடதுசாரிகளும் போராடி வருகின்றனர். இறுதியில் மக்கள் நலன் சார்ந்த அரசியலே வெல்லும்.
திமுக அரசின் கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் தொழிலாளர் நலன் சார்ந்து இந்த அரசு இன்னும் என்ன செய்திருக்க வேண்டும்?
மாநில உரிமைகளைப் பறிக்கும் பாஜக அரசை எதிர்ப்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது. ஆனால், 8 மணி நேர வேலையை 12 மணிநேரமாக உயர்த்தி மசோதா கொண்டுவந்தது, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் அரசின் தொய்வு போன்றவையும் இருக்கத்தான் செய்தது. பின் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்றது. தொழிலாளர் நலன் என்று வரும்போது தமிழக அரசு இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
கூட்டணிக் கட்சிகள் ‘ஆட்சியில் பங்கு' என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றன. மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு இதில் என்ன? 2026 தேர்தலில் எத்தனை இடங்களை கேட்பதாக உள்ளீர்கள்?
ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதுவரை வைக்கவில்லை. எங்களை பொறுத்தவரை பாஜகவையும், அதன் மதவாத கூட்டணியையும் வீழ்த்துவதே பிரதான நோக்கம். தேர்தல் நேரத்தில் தொகுதி உடன்பாடு குறித்து பேசுவோம். கடந்த தேர்தலில் போட்டியிட்ட இடங்களை விட 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களை நிச்சயமாக கேட்போம். இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வழங்க வலியுறுத்துவோம். ஆனால் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை பற்றி திமுக தலைமை தான் முடிவு செய்யவேண்டும்.
விஜய்யின் தவெக வரவு, திமுக கூட்டணிக்குத் தலைவலியாக அமையுமா? பாஜகவை கொள்கை எதிரி என்கிறாரே?
விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்கிறார். ஆனால் பாஜகவின் எந்த கொள்கையை அவர் எதிர்க்கிறார்? மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தைச் சிதைப்பது, தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவது, புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு என பாஜகவின் மக்கள் விரோதத் திட்டங்கள் எதைப் பற்றியும் அவர் வாய் திறக்கவில்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தை பற்றி பேசவே இல்லை.
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை நீங்கள் வெறும் தேர்தல் சவாலாகப் பார்க்கிறீர்களா அல்லது கலாச்சார ரீதியான ஆபத்தாகப் பார்க்கிறீர்களா?
பாஜக தமிழகத்தில் மதரீதியில் மக்களை பிளவுப்படுத்தி காலூன்ற முயற்சி செய்கிறது. ஆனால் அதில் அவர்கள் வெற்றிபெறவில்லை. மதுரையில் 10 ஆண்டு காலமாக கிடப்பில் போட்ட எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பாஜக தலைவர்கள் பேச மாட்டார்கள். ஆனால் திருப்பரங்குன்றத்தில் பிரச்சினையை எழுப்பி திசை திருப்புவார்கள். தேர்தலில் மட்டுமல்ல, கலாச்சார ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் பாஜகவை எதிர்த்து முறியடிக்க வேண்டும். அந்த வலிமை தமிழக மக்களுக்கு உண்டு.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் முதல்வரை நேருக்கு நேர் விவாதத்துக்கு அழைக்கிறாரே பழனிசாமி?
தேர்தல் நேரத்தில் ஒண்டிக்கு ஒண்டி என்று அழைப்பது வெறும் சவடால் மட்டுமே. அதிமுகவுடன் கூட்டணி என்று அமித் ஷா அறிவித்த பின், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய பல்வேறு நடவடிக்கைகளை பாஜக எடுத்திருக்கிறது. அதைப்பற்றி பேசவே பழனிசாமி தயாராக இல்லை. பல மாநிலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த மாநில கட்சிகள் இன்றைக்கு காணாமல் போய்விட்டன. அதே நிலைமை அதிமுகவுக்கு ஏற்படும். பழனிசாமி தவறான முடிவெடுத்திருக்கிறார்.