“பொங்கலுக்குப் பிறகு பெரிய திருப்பங்கள் இருக்கும்” - பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் சூசகம் | நேர்காணல்

“பொங்கலுக்குப் பிறகு பெரிய திருப்பங்கள் இருக்கும்” - பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் சூசகம் | நேர்காணல்

Published on

அதிமுக, திமுக என இரண்டு திராவிடக் கட்சிகளிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்து, தற்போது பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராக தடம் பதித்து வருபவர் கே.பி.ராமலிங்கம். தமிழக அரசியல் கள நிலவரம் குறித்து ‘ஜனநாயகத் திருவிழா’வுக்காக பேசினோம். ‘பொங்கலுக்குப் பிறகு பெரிய திருப்பங்கள் இருக்கும்’ என்று சூசகமாகத் தெரிவித்தார். அவரது பேட்டி:

Q

திராவிட இயக்கத்தின் பின்னணியில் இருந்து வந்து, இப்போது தேசியக் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கிறீர்கள். இரண்டு கட்சியிலும் நீங்கள் கண்ட வேறுபாடு என்ன?

A

எம்.ஜி.ஆர் ஒரு மாபெரும் தேசியவாதி. ஆனால், ‘திராவிட இயக்கம்' என்ற வட்டத்துக்குள் அவரை அடைத்து, ஒரு மாநிலத் தலைவராக மட்டுமே சுருக்கிவிட்டார்கள். திராவிட இயக்கத்தில் இருந்துகொண்டே தேசியத்தைப் போற்றுவதில் எந்தத் தவறும் இல்லை. திராவிடம் என்பது தேசியத்துக்குள் அடக்கமே தவிர, அதற்கு எதிரானது அல்ல. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று அண்ணா சொன்னபோதே, கடவுள் மறுப்பு அங்கு தகர்ந்துவிட்டது. ஆனால், இன்றைய திமுக தேர்தல் லாபத்துக்காக மட்டுமே ‘திராவிடம் - தேசியம்' என்ற பாகுபாட்டைத் திட்டமிட்டுப் பரப்பி வருகிறது.

Q

கருணாநிதியின் அன்பைப் பெற்றவராக இருந்த நீங்கள், இன்று அவர் வழியில் ஆட்சி நடப்பதாகக் கூறும் திமுக அரசையே விமர்சிக்கிறீர்களே?

A

இன்றைய திமுக ஆட்சி கருணாநிதியின் வழியில் நடைபெறவில்லை. ஓடாமல் நின்ற திருவாரூர் தேரை ஓடவைத்தவர் கருணாநிதி. அவர் ஆன்மீகத்தை ஒருபோதும் தீவிரமாக எதிர்த்ததில்லை. ஆனால், இன்றைய ஸ்டாலின் அரசோ திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கூட அனுமதி மறுக்கிறது. தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், அவர்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, வாக்குகளைப் பெறுவதற்காக திமுக அவர்களைத் திட்டமிட்டு ஏமாற்றி வருகிறது.

Q

மு.க.அழகிரி-க்கும் உங்களுக்கும் இருந்த நெருக்கம் தமிழகம் அறிந்தது. அவர் ஏன் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்?

A

மு.க.அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்கவில்லை, அமைதியாக இருக்கிறார். அதேநேரத்தில், மு.க.ஸ்டாலின், ‘தான்' என்ற அகம்பாவத்துடன் அரசியலை அணுகுகிறார். இதன் மூலம் கருணாநிதிக்கே ஒரு வரலாற்றுப் பிழையை ஸ்டாலின் செய்துவிட்டார். 2026 தேர்தல் எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடந்தும் திமுகவால் வெல்ல முடியாமல் போகும்போது, ​​ஸ்டாலின் தான் செய்த பிழையை உணருவார்.

Q

கொங்கு மண்டலத்தில் பாஜக பலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த தேர்தலில் பாஜக-வுக்கு எந்த அளவுக்கு கைகொடுக்கும்?

A

அதிமுக - பாஜக கூட்டணிக்குக் கொங்கு மண்டலம் மட்டுமல்ல, தென் மற்றும் வட மாவட்டங்களும் பலமான அடித்தளமாக அமையும். தேர்தல் களத்தில் எத்தனை அணிகள் நின்றாலும், திமுகவை வீழ்த்தக்கூடிய தகுதியான அணி எது? என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். மக்களின் தீர்ப்பு, திமுகவை வீழ்த்தி, எங்களது கூட்டணியை அரியணையில் ஏற்றும். இந்த 2026 தேர்தல் ‘யார் ஆட்சிக்கு வரக்கூடாது' என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாக அமையும்.

Q

வெறும் திமுக மீதான ஊழல் புகார்கள் மட்டுமே தேர்தலை வெல்ல போதுமானதாக இருக்குமா?

A

திமுக அரசு மீது ஊழல் புகார்கள் மட்டுமல்ல. கலாச்சார சீர்கேடு, பெருகிவரும் போதை கலாச்சாரம், கொலை, கொள்ளை எனச் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு என எத்தனையோ புகார்களைப் பட்டியலிடலாம். திமுகவின் இந்த ஐந்தாண்டு கால ஆட்சியால் ஏற்பட்ட பாதிப்புகள், தமிழகத்தின் கலாச்சாரத்தை அடுத்த 20 ஆண்டுகள் கெடுத்துவிட்டது.

Q

பாஜகவை கொள்கை எதிரி என விஜய் விமர்சிக்கிறாரே?

A

அது, அவரது வாய்க்கொழுப்பு. முதலில் அவர் தனது கொள்கை என்ன என்பதைத் தெளிவுபடுத்தட்டும். கிறிஸ்தவர் என்பதால் பாஜகவை விஜய் விமர்சிக்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது. நாங்கள் இன்னும் விஜய்யை விமர்சிக்கவே தொடங்கவில்லை. நாங்கள் களமிறங்கினால், எங்கள் விமர்சனங்கள் மிகவும் கடுமையானதாக இருக்கும்.

Q

கொள்கை எதிரி என்பதால் தான் விஜய்யை திமுகவின் ‘பி’ டீம் என சொல்கிறீர்களா?

A

திமுகவைத் தவிர வேறு எவரும் எங்களைக் கொள்கை ரீதியாக எதிர்க்க முடியாது. ஏனெனில், திமுகவிடம் மட்டுமே ‘கடவுள் மறுப்பு' கொள்கை உள்ளது. அதுவும் குறிப்பாக இந்து கடவுள்களை மட்டுமே அவர்கள் மறுக்கிறார்கள். இப்போது நடிகர் விஜய்யும் அதே பாதையில் பயணிப்பாரானால், அவர் திமுகவின் 'பி' டீம் தான் என்பதில் சந்தேகமே இல்லை.

Q

எம்.ஜி.ஆரை போலவே, விஜய்யும் திராவிடத்தையும் தேசியத்தையும் இணைத்துப் பேசுகிறாரே?

A

விஜய் திராவிடத்தையும் தேசியத்தையும் பேசினாலும் ‘தெய்வீகத்தை' விட்டுவிடுகிறார். ஆனால் எம்.ஜி.ஆர். அதை போற்றியவர். எனவே விஜய்யை எம்.ஜி.ஆரோடு ஒப்பிட முடியாது. 'மூன்றாவது மொழியாக ஒரு இந்திய மொழியைப் படியுங்கள்' என்று சொன்னால், வித்தியாசம் தெரியாதவர்கள் அதை ‘இந்தி திணிப்பு' என்கிறார்கள். இந்திய மொழிகளுக்கும், இந்திக்கும் வேறுபாடு தெரியாத ஸ்டாலின் போன்றவர்களிடம் தேசியத்தைப் புரியவைக்க முடியாது.

Q

பொங்கலுக்கு பிறகு கூட்டணியில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்கலாமா?

A

தேர்தல் நெருங்கும்போதுதான் அரசியல் களத்தின் வேகம் சூடுபிடிக்கும். ‘விஜய்யுடன் கைகோர்த்தால் புதிய ஆட்சியை அமைக்கலாம்' என்ற நோக்கில் காங்கிரஸ் செயல்படுவதாகத் தெரிகிறது. இதுவரை வெளிவராத பல அரசியல் ரகசியங்கள் இன்னும் உண்டு. தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் கூட்டணிக் காட்சிகள் முழுமையாக தெளிவாகும். திமுக 200 தொகுதிகளில் போட்டியிடும் என ஸ்டாலின் கூறி வருகிறார். அப்படியென்றால் கூட்டணிக் கட்சிகளுக்கு வெறும் 34 இடங்கள்தான் கொடுப்பரா? இந்த இடப்பங்கீட்டைக் கணக்கு போட்டுத்தான் மற்ற கட்சிகள் தங்கள் முடிவை எடுப்பார்கள். பொங்கலுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு பெரியதிருப்புமுனை ஏற்படும். நல்ல முடிவுகள் வெளியாகும்.

“பொங்கலுக்குப் பிறகு பெரிய திருப்பங்கள் இருக்கும்” - பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் சூசகம் | நேர்காணல்
“சிறுபான்மையினரின் பாதுகாவலன் விஜய் தான்!” - தவெக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் தாஹிரா பானு நேர்காணல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in