பெ.சண்முகம்
காங்கிரஸ் கட்சிக்கு 60 தொகுதிகள் கூட கொடுக்கட்டும், இடதுசாரிகளுக்கு ஏன் குறைக்கிறீர்கள் என்பதைத்தான் நாங்கள் கேட்கிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
இது தொடர்பாக திருவாரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூர் சம்பவத்துக்கு சிபிஐ விசாரணை தேவை என கேட்ட விஜய்யே, தற்போது சிபிஐ விசாரணையில் சிக்கிக் கொண்டிருக்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வரும் தேர்தலில் தங்களது கூட்டணிக்குள் விஜய்யை கொண்டுவர பாஜக முயற்சிக்கிறது. பாஜக - அதிமுக கூட்டணியில் விஜய் இணைந்தால், திமுக-வுக்குத்தான் பலமாக அமையும்.
ஏனெனில், திமுக, அதிமுக அல்லாத ஒரு புதிய முதல்வர் என்ற முறையில் தான் விஜய்யை மக்கள் ஆதரிக்கிறார்கள். அதற்கு மாறாக விஜய் கூட்டணி அமைத்தால், மக்கள் அவரை ஆதரிப்பார்களா என சொல்ல முடியாது.
2026 தேர்தலுக்குப் பிறகு தான் விஜய்யின் செல்வாக்கு என்ன என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது வெளியாகி உள்ளது கருத்துத் திணிப்பு. அதை வைத்துக்கொண்டு தேர்தல் முடிவை முடிவு செய்யக்கூடாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் கொடுத்ததை பற்றி நாங்கள் கேட்கவில்லை.
60 தொகுதிகள் கூட கொடுக்கட்டும், கூட்டணி பேச்சுவார்த்தையை பொறுத்தவரை அந்தந்த கட்சிகள் தனித் தனியாகச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருக்கும்போது, இடதுசாரிகளுக்கு ஏன் குறைக்கிறீர்கள் என்பதைத் தான் நாங்கள் கேட்கிறோம். இடதுசாரிகள் கடந்த காலத்தில் ஒதுக்கப்பட்டதை விட கூடுதலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது மாநிலக் குழுவின் முடிவு. அந்த முறையில் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.