

தமிழகத்தில் ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு நடக்கிறது. ஆனால், அருகில் இருக்கும் புதுச்சேரிக்கு, ஏப்ரல் 9-ம் தேதியே வாக்குப்பதிவு நடக்கிறது. இதனால் புதுச்சேரியில் நேற்றே வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், இன்னும் யாருக்கு எந்தத் தொகுதி என்றே இனம் காணப்படாததால் பரபரப்பில் இருக்கின்றன புதுச்சேரி மாநில அரசியல் கட்சிகள்.
வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான நேற்று வேட்பு மனு படிவங்களை மட்டுமே வாங்கிச் சென்றனர். யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. மார்ச் 23-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்.
மார்ச் 18-ம் தேதி அமாவாசை என்பதால் அன்றைய தினம் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்புவார்கள். இதனால் தொகுதிகள் எண்ணிக்கை, போட்டியிடும் தொகுதிகள் ஆகியவற்றை உடனடியாக பேசி முடித்து வேட்பாளர்களையும் அறிவிக்க வேண்டிய அவசரத்துக்கு புதுச்சேரி அரசியல் கட்சிகள் ஆளாகியுள்ளன.
புதுச்சேரியைப் பொறுத்தவரை, தேர்தல் பிரச்சாரம் செய்ய அதிகபட்சமே 14 நாட்கள் தான் வேட்பாளர்களுக்கு இருக்கிறது. ஏப்ரல் 7-ம் தேதியுடன் பிரச்சார ஆர்ப்பாட்டங்கள் முடிவுக்கு வந்துவிடும். தேர்தலில் போட்டியிடத் தயாராகி வரும் வேட்பாளர்களை மிகக் குறைவான இந்த ‘அவகாசம்’ இப்போதே உச்சகட்ட டென்ஷனில் உட்காரவைத்திருக்கிறது.
ஏனாமில் மல்லாடி கிருஷ்ணாராவ் போட்டி புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஏனாம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவிக்கப்பட்டுள்ளார். மல்லாடி கிருஷ்ணாராவின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி இதை அறிவித்தார்.