கள்ளக்குறிச்சி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோரை தாக்கிய சம்பவத்துக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் ஜெயசங்கர் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏழுமலை உள்ளிட்டோர் நேற்று முன்தினம் உளுந்தூர்பேட்டை அடுத்த கிளியூர் கிராமம் நோக்கி காரில் சென்றனர். கிளியூர் அரசுப் பள்ளி அருகே வந்தபோது காரை வழிமறித்த ஒரு கும்பல் கார் மீது தாக்குதல் நடத்தியதோடு, காரில் பயணித்த ஜெயசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசி தாக்கினர். காரில் இருந்த கட்சிக் கொடியையும் சேதப்படுத்தினர்.
இதுகுறித்து மாவட்டச் செயலாளர் ஜெயசங்கர் களமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வடமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சரத்குமார், சுந்தரேசன், செல்வகணபதி, ஐயனார், அசோக்குமார், பன்னீர்செல்வம் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: வடமாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் கட்சி தலைவர்களை கொலைவெறியேடு தாக்கியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
வடமாம்பாக்கம் கிராமத்தின் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர், ‘பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்’ கீழ் 22 வீடுகளை கட்டாமலே அவராகவே பணத்தை எடுத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி உள்ளார். இதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து போராடி வந்தனர்.
இதை மனதில் வைத்துக் கொண்டு, ஆத்திரமடைந்த முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரின் மகன்கள் இருவர் உள்பட8 பேர் திட்டமிட்டு இந்த வன்முறை மற்றும் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும்.