திமுக குழுவினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம். படம்: எல். சீனிவாசன்
கடந்த தேர்தலை விட குறைவான தொகுதிகளை ஏற்றுக் கொள்ள முடியாது என திமுக-விடம் தெரிவித்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உறுதிபடத் தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடந்த முறை போட்டியிட்ட 6 தொகுதிகளில் ஒன்றை குறைத்து பெற்றுக் கொள்ளுமாறு திமுக வலியுறுத்தி வருகிறது. இதனை ஏற்க மறுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள், கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை காட்டிலும் கூடுதலான தொகுதிகள் வேண்டும் என திமுக-வுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இதனால் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பெ.சண்முகம் கூறியதாவது: கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட குறைந்த தொகுதிகளை பெற்றுக்கொள்ளுமாறு திமுக தரப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது. அதை ஏற்க முடியாது, கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும், உரிய முறையில் எங்களுக்கான இடங்கள் உயர்த்தப்பட வேண்டும் என திமுக-விடம் சொல்லியிருக்கிறோம்.
கூடுதல் தொகுதிகளை கேட்டுப் பெறுவதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பலத்துக்கு ஏற்ப தொகுதிகள் வழங்கப்பட வேண்டும். கூடுதல் தொகுதிகளை விட குறைவாக ஒதுக்கினால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும். எங்களின் கோரிக்கை குறித்து முதல்வரிடம் கலந்து பேசி தெரிவிப்பதாக சொல்லி இருக்கிறார்கள். ஓரிரு நாட்களுக்குள் தொகுதிப் பங்கீடு உடன்பாடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.